வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

போராட்ட களம்.


கடந்த ஐந்து ஆண்டு கால மன்மோகன் ஆட்சிக்கும் நடைபெறும் 75 நாள் மோடியின் ஆட்சிக்கும் எந்தவித மாற்றமில்லாமல் இருப்பதாக ஊடகங்கள் சொல்லிவரும் நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால  கலைஞர் ஆட்சியும் தொடர்ந்து அம்மாவின் மூன்று ஆண்டுகால ஆட்சியும் தொழிலாளர்கள் நிலையில் எந்தவித முன்னேற்ற மாற்றத்தினையும் காண முடியவில்லை. தொழிலாளர்கள் நாளுக்கு நாள் விலைவாசி உயர்விலும் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியின் பிடியில்  ஆலையில் சிக்கிய கரும்பாக பிழியப்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலை மற்ற தொழிலாளர்களை விட அம்மாவின் மீதும் அவர்களின் ஆட்சியின் மீது  மிகுந்த நம்பிக்கை வைத்த டாஸ்மாக் தொழிலாளர்களை மிகவும் பாதித்துள்ளது. ஏனெனில் சென்ற ஆட்சியில் கலைஞர் அவர்கள் அம்மாவினால் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தியது நாடு அறிந்ததே. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது டாஸ்மாக்கினை இழுத்து பூட்டிவிடுவதாக மிரட்டி பணியவைத்தார். அப்போது பிரபல எழுத்தாளர் (தி ஹிந்து தமிழ்) சமஸ் அவர்கள் தினமணியில் யாரங்கே? என்ற தலைப்பில் அரசரை போன்று ஆட்சியாளர்கள் நடப்பதாக கட்டுரை வடித்தார். அம்மாவும் “டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை” என பேட்டியளித்தார். ஆனால் ஆட்சியின் கடந்த மூன்று வருடங்களிலும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை அப்படியே நிறைவேற்றப்படாமல் உள்ளது.