வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ஆயுள் தண்டனை போதுமே!


இந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை. அதற்கு அடுத்த படியான தண்டனை ஆயுள்தண்டனை. இந்த ஆயுள் தண்டனை என்பது சிறைச் சாலையில்  14 ஆண்டுகள்  கழித்தால் விடுதலை கிடைக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் என்ன குற்றம் இழைத்தார்களோ தெரியவில்லை
கம்பி வலைகளுக்குள்ளே 14 ஆண்டுகள் கழித்தும் இன்றும் விடுதலை கிடைக்கவில்லை. கடந்த 31.3.2017 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 3500 நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கண்துடைப்பு மதுவிலக்கு அமுல் நடவடிக்கையாக  1000 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அக்கடைகளின் ஊழியர்களை மீதம் இருந்த டாஸ்மாக் கடைகளிலேயே பணி பார்க்கப் பணிக்கப்பட்டனர். தற்பொழுது அடைக்கப்படும் 3500 டாஸ்மாக் கடை ஊழியர்களின் நிலை  இன்று மிகுந்த பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளது
கடந்த 2003ல் மாவட்ட ஆட்சியர்கள் நேரடி கண்காணிப்பில் வேலைவாய்ப்பு துறை பரிந்துரையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் 36000 பேர் ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பணியாளர்கள் மதுவுக்கு மடிந்து மரணதண்டனை பெற்றுவிட்டனர். மேலும் பலர் வருமான போதாமல் வந்த வழியே திரும்பினர்.