செவ்வாய், 2 ஜூலை, 2013

ஏமாற்று ஏலம்

 
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அமைந்துள்ள பார்களை நடத்துவதற்கான ஏலநடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.            இந்த ஏலத்திற்கான விண்ணப்பங்கள் டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும். இந்த விண்ணப்பங்களை சாமானியர்கள் யாரும் எளிதில் பெற்றுவிடமுடியாது. அந்தந்த ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்களிடம் டோக்கன் பெற்று வரும் நபர்களுக்கு மட்டும் தான் விண்ணப்ப படிவம்.அதே போன்று பார் ஏலநடவடிக்கைகளை பற்றி முக்கிய பத்திரிக்கைகளில் எல்லாம் விளம்பரம் இல்லை.யாருமே வாங்கிட முடியாத நாளிதழில் விளம்பர வெளியிடுவதோடு ஆளும்கட்சிக்காரர்களை தவிர்த்து மற்ற எவரும் கலந்துகொள்ள முடியாத நிலையினை ஏற்படுத்தி டாஸ்மாக் நிர்வாகம் ஏலத்தினை நடத்திவருகின்றது.


 ஒவ்வொரு கடைக்குரிய பார் எடுப்பதற்கான ஏலத்தொகை, ஏரியாவை பொறுத்து அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டுள்ளதால் அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட, கூடுதலாக ரூ.100 கட்டினாலும் பார் உரிமம் வழங்கப்படும். அதிக தொகைக்கு பார் ஏலம் எடுத்து நடத்த நினைக்கும் போட்டியாளர்களால் அரசுக்கு பெருமளவு வருவாய் கிடைக்கும். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படாததால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.. பார் ஏலம் எடுத்தவர்கள், கடையில் விற்பனையாகும் தொகையின் அடிப்படையில் இரண்டரை சதவீதம் வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும்“ .

தமிழகம் முழுமைக்கும் அரசிற்கு தெரிந்தே டாஸ்மாக் பார் ஏலம் என்பது ஒரு கண்துடைப்பு நாடகமாகவே நடைபெறுகின்றது. இதனால் அரசிற்கு ஏற்படும் இழப்புப்பற்றி எந்த அரசியல்வாதிகளும் கண்டு கொள்வதில்லை.யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அந்த கட்சியினை சேர்ந்தவர்கள் மட்டுமே பார் நடத்திட முடிகின்ற நிலையினை யார் மாற்றுவது?இந்த ஆளும் கட்சி குண்டர்களிடம் டாஸ்மாக் ஊழியர்கள் படும் அவஸ்தைகளிலிருந்து மீட்பது எப்போது? மேல்மட்டத்தில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஊழலில் திளைத்து இருந்துகொண்டு ஊழியர்களை வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று பிழைக்கவேண்டிய சூழ்நிலையில் டாஸ்மாக் முழுமையும் ஊழல்மயமாகி இருப்பதிலிருந்து ஊழியர்கள்  விழித்து ஏமாற்று ஏலங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்.

கருத்துகள் இல்லை: