வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கருப்புக்கு சரக்கு.

தமிழகத்தின் கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்குவதில் முதலிடம் வகிப்பவர் கருப்பசாமி ஆகும்.கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் (மூடப்)பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கரும்பு சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக் கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம். தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார்.



மதுரையை சுற்றிய கிராமங்களில் கருப்பு இல்லாத கிராமமே இல்லை எனக்கூறிவிடலாம்.மதுரையில் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட இந்துக்களும் சாதி இந்துக்களும் இணைந்தே கருப்புதனை வணங்குகின்றனர்.இந்த கருப்பசாமி வழிப்பாட்டில் தலையில் தேங்காய் உடைத்தல் மற்றும் மது ,சுருட்டு வைத்து வழிபடுதல் முக்கிய நிகழ்வாகும். பண்டைய காலங்களில் களவாட செல்பவர்கள் கருப்புவிடம் அனுமதி பெற்றே சென்றதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். ஆடி மாதங்களில் தமிழக முழுவதும் வியாபாரங்கள் மந்தநிலையில் இருப்பதால் ஆடி தள்ளுபடி வழங்குவது அனைவரும் அறிந்ததே.டாஸ்மாக்கிலும் ஆடிமாதம் வியாபாரம் மந்தம் என்றாலும் மதுரையை சுற்றிய கிராமங்களில் கருப்புவழிபாடு ஆரம்பித்துவிட்டால் விற்பனை சகஜநிலைக்கு திருப்பிவிடுகின்றது.

தற்போதைய ஆடிமாதத்தில் இரு கிராமங்களில் நடைபெற்ற கருப்பு வழிப்பாட்டினை கீழ்காண்போம்.


வருஷநாடு ,கடமலைக்குண்டு,மயிலாடும்பாறை,மூலக்கடை பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஜோராக நடந்தது.

கடமலைக்குண்டு, உப்புத்துறை மாளிகை பாறை கருப்பசாமி கோயிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.இவர்கள் சாமிக்கு காணிக்கையாக விலையுயர்ந்த மது பாட்டில்கள் வாங்கி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். மது பாட்டில்கள் வாங்குதற்காக ஆண்களும்,பெண்களும் டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்றனர். இதனால், இந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக இருந்தது.

தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, உப தெய்வமான சோணை கருப்பசாமி கோயிலில் நடந்த பொங்கல் விழாவில், பக்தர்கள் நள்ளிரவில் கிடா வெட்டி, மதுபாட்டில்களை படைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். குச்சனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவின், 4 வது சனி வாரம் முடிவடைந்துள்ள நிலையில், உப தெய்வமான சோணை கருப்ப சாமிக்கு, சிறப்பு செய்யும் பொங்கல் விழா  நள்ளிரவில் நடந்தது. சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சோணை கருப்பசாமியை தரிசித்து, தங்களது வேண்டுதல்களை முன்வைப்பர். வேண்டுதல் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் நிறை வேறும் என்பது ஐதீகம்.வேண்டுதல் நிறைவேறியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, ஆட்டு கிடாக்கள், கோழிகள், மதுபாட்டில்களை கோயில் நிர்வாகத்திடம் வழங்குவர். இதன்படி, 10 முதல் 15 கிடாக்கள், 500 கோழிகள், 5000 மதுபாட்டில்கள் வரை படைக்கப்படுகின்றன. நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளை அறுத்து, அதன் உறுப்புகளையும், நள்ளிரவில், ஆயிரக்கணக்கான மது பாட்டில்களையும் கருப்பசாமி முன் படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மது பாட்டில்களை உடைத்து, குதிரை சிலையின் கீழ் உள்ள துவாரத்தில் ஊற்றினர். வெட்டப்பட்ட கிடா, கோழி களுடன், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் நடந்தது.

இவ்வாறு கிராமங்களில் கருப்புவழிப்பாட்டின் மூலம் பண்டைய தொண்மைகளை தொலைக்காமல் புதுப்பித்து வருவதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது அதிகாரிகளிடம் இலக்கு பிரச்சனைகளை சமாளித்து வருகின்றனர்.உண்மையில் கருப்பசாமி ஊர்மக்களை காப்பற்றுவதோடு டாஸ்மாக் ஊழியர்களையும் காப்பாற்றி வருகிறார்.மதுரை பாண்டிகோவிலில் சிறப்பாக வழிபாடுகளுக்கிடையே சுருட்டு படைக்கப்படுகின்றது. இக்கட்டுரையை படிக்கின்ற மதுஒழிப்பு பிரச்சாரர்கள்
உடன்  கருப்புசாமிதனை தீட்டிவிட வேண்டாம்.ஏனெனில் மதுரை மாவட்டம் முதலைகுளம் கருப்பசாமி கோவிலானது மதுப்பழக்கத்தினை விட நினைப்பவர்கள் சத்தியம் செய்யும் இடமாக அமைந்துள்ளது.இங்கு பல மதுஅடிமைகள் சத்தியம் செய்து மதுவினை தங்கள் வாழ்விலிருந்து ஒழித்துள்ளனர்.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை..

3 கருத்துகள்:

செழியன் சொன்னது…

” முதலைகுளம் கருப்பசாமி கோவிலானது மதுப்பழக்கத்தினை விட நினைப்பவர்கள் சத்தியம் செய்யும் இடமாக அமைந்துள்ளது. இங்கு பல மது அடிமைகள் சத்தியம் செய்து மதுவினை தங்கள் வாழ்விலிருந்து ஒழித்துள்ளனர் ”.

இப்படிபட்ட செய்தியை விளக்கி கட்டுரை எழுதாமல் கடைசியில் சிறியதாக கொடுத்துள்ள போதே உங்கள் நாட்டுச்சரக்கு வேலை செய்வது நன்றாகத் தெரிகிறது.

கடவுளுக்கு சரக்கு தரும் வரை கவலையில்லை, கருப்புசாமி உங்களை காக்கும்.. கவலை வேண்டாம்.

இரண்டு வகையான கருப்புசாமிகள் உள்ளனர். பாவம் நீங்கள் கூறீய முதலைகுளம் கருப்பசாமிக்கு அவ்வளவு சக்தி இல்லை போலும்.

குடிப்பவர்களையும், கும்மாளம் போடுபவர்களையும் கருப்பு காப்பான்.

பாவம் இந்த கருப்பு... கடைசி வரை ஒரு கட்டிங் கூட இந்த கருப்புக்கு கிடைக்காது. அத நெனச்சாத்தான் கொஞ்சம் கவலையாயிருக்கு.

கவலையை போக்க 3 கட்டிங்க நான் போட்டுகிறேன். எனக்காக இல்லை எங்க கருப்புக்காகதான்...

thamizhmani2012 சொன்னது…

கருப்பசாமி பக்தர்களையும் காத்து டாஸ்மாக் ஊழியர்களையும் காத்து ரட்சிப்பது கண்டு மெய் சிலிர்த்துப்போனேன்..

KUMAR சொன்னது…

நன்றாக உள்ளது.