வியாழன், 13 பிப்ரவரி, 2014

‘சரக்கு சாமி!’


குவாட்டருக்கு மேட்டர் முடிக்கும்



சாமி சத்தியமா குடிக்க மாட்டேன்என்று எந்த டாஸ்மாக் பிரஜையாவது இனி சத்தியம் செய்தால்... குடும்பத்தினர் குதூகலித்து விடவேண்டாம். ‘எந்த  சாமி மேல சத்தியமாஎன எதிர்கேள்வி கேட்பது அவசியம். இந்தபழங்குடிகளை பாதுகாப்பதற்கென்றே நம்மூரில் நிறைய சாமிகள் இருக்கிறது. அப்படி ஒரு  சாமி குறித்த அறிமுகம். (இந்தத் தளத்தில் செய்யாவிட்டால்... வேறு எந்தத் தளத்தில் செய்வது???)

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கிற உஜ்ஜயினி நகரம் - பாடங்களில் படித்த ஞாபகம் இருக்கா? - ரொம்ப விசேஷமானது. பல ஆயிரம் ஆண்டுகள்  பழமையானது. நிறைய கோயில்கள் இருப்பதால், இது புனித நகரமும் கூட. மக்களை பாதுகாக்க / பராமரிக்க, இங்கு பல தரப்பட்ட சாமிகள் இருந்தாலும்...  சூப்பர் ஸ்டார் சாமி என்றால், அது கால பைரவ சாமிதான். பல ஆயிரம் ஆண்டுகள் முன், பத்ரசேனன் என்கிற மன்னனால், ஷிப்ரா நதிக்கரையில் இந்த  கோயில் கட்டப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அழகழகான ஓவியங்கள், அலங்கரிக்கப்பட்ட மதில் சுவர்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், அதைத்  தவிரவும் இந்தக் கோயில் பற்றிப் பேச ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.

ஊருக்கு மத்தியில் இருக்கிற இந்த கால பைரவரை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான கூட்டம் வருகிறது. வருகிற பக்தர்கள் கையில் எது இருக்கிறதோ ல்லையே... ‘சரக்குகட்டாயம் இருக்கும். குவார்ட்டர்... ஆஃப், ஃபுல் என அவரவர் வசதிப்படி உள்ளூர் கடைகளில் வாங்கிய படி கோயிலுக்கு வந்துதீர்த் தவாரிநடத்திச் செல்கிறார்கள் பக்தகோடிகள். கோயிலில் மது பாட்டிலுக்கு என்ன வேலை என்று ஆச்சர்யமாகவும், நம்பமுடியாத பார்வையுடனும் நீங்கள்  கேட்கலாம். நம்ம ஊர் கோயில்களில், ‘சாமிக்கு அர்ச்சனை பண்ண பூ, பழம் வாங்கிட்டுப் போங்கம்மா...’ என்று அட்வைஸ் தருவார்கள் இல்லையா... துபோல, இந்தக் கோயிலுக்குப் போகும் பக்தர்களை,சாமிக்கு அர்ச்சனை பண்ண விஸ்கி, பிராந்தி வாங்கிட்டுப் போங்க பாஸ்என்று அட்வைஸ் தரு வார்கள்.

கோயிலில் மொத்தம் எட்டு பைரவர்கள் சன்னதி இருக்கிறது. அனைத்துக்கும் பிரதானமாக அமைந்திருக்கிறது கால பைரவர் சன்னதி. இங்குதான் நடக்கும்  மேற்படி தீர்த்தவாரி. உள்ளே நுழைந்ததும் நமது கையில் இருக்கிற ஓல்ட் மங்க்கை கவனித்து விட்டால், அங்கிருக்கிற பூசாரி, ‘சாமிக்கு அர்ச்சனையாஎன்று  கேட்டபடி நம்மிடம் வந்து விடுவார். நாம் கொடுக்கிற ஓல்ட் மங்க் பாட்டிலை திறந்து, சாமிக்கு படையலிடுவதற்காக உள்ள புனித கலயத்தில் ஊற்றுகிறார்.  பின்னர், பய பக்தியோடு கால பைரவர் சிலைக்கு அருகே சென்று மந்திரங்கள் ஓதிய படி... பாத்திரத்தை கல பைரவர் சிலையின் வாய் அருகே வைக்க....  பாத்திரத்தில் இருக்கும் சரக்கு கொஞ்சம், கொஞ்சமாக குறைகிறது... கால பைரவர் மீது சத்தியம்.

ஒரு சில நிமிடங்களில் தட்டில் இருக்கிற மொத்தச் சரக்கையும் சொட்டு பாக்கி வைக்காமல் உறிஞ்சிக் குடித்து விட்டு, ராவாக அடித்த சலனமே இல்லாமல்  ஸ்டெடியாக இருக்கிறார் கால பைரவர். ‘தட்டை நீட்டின உடனே ஒரே ரவுண்டில முடிச்சிட்டார் பைரவர். நீ நினைச்சு வந்த காரியம் நல்லபடியா  நடக்கும்...’ என்று அருள்வாக்குக் கூறி அனுப்பி வைக்கிறார் பூசாரி. இது கதையல்ல... நிஜம்! லோக்கல் சரக்கு முதல், வெளிநாட்டு இறக்குமதி சரக்குகள்  வரை தினமும் அள்ளிக் கொண்டு பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு படையெடுக்கிறார்கள். மிக்சிங்கிற்கு வாட்டர் பாக்கெட், சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.  கால பைரவர்ராவாகபார்த்துக் கொள்கிறார்.

‘‘ஒரு நாளைக்கு சர்வ சாதாரணமா 200 பாட்டிலாவது கால பைரவ சாமி சாப்பிடுது. சாமி சாப்பிடற சரக்கெல்லாம் எங்க போகுதுன்னே இதுவரைக்கும்  தெரியலை. ரொம்பத் துடியான சாமி இது. மனசுக்குள்ள ஒண்ணு நினைச்சிட்டு, ஒரு மக்டவல் வாங்கிட்டுப் போனேன். தட்டுல ஊத்திக் கொடுத்ததும்,  கப்புனு குடிச்சி முடிச்சிடுச்சி. அடுத்த மூணாவது நாளே, நான் நெனச்ச மேட்டர் முடிஞ்சிருச்சினா... நம்ம சாமியோட பவரைப் பாத்துக்கோங்க....’’ என்று  இங்கு முகாமிட்டிருக்கும் பக்தர்கள் கால பைரவர் மகாத்மியம் கூறுகிறார்கள்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -





கருத்துகள் இல்லை: