தள்ளாடும் தமிழகம் 3
தமிழகத்தில் மதுக் கொள்கை என எதுவும் இல்லை. அதிகபட்ச வருவாய் ஒன்றுதான் அதன் இலக்கு. அந்த இலக்கை ஆண்டுதோறும் எட்ட வேண்டுமெனில் புதிய குடிகாரர்களையும், குடி அடிமைகளையும் அது உருவாக்கியாக வேண்டும். எந்தவொரு சந்தைப் பொருளுக்குமே தனக்கான வாழ்நாள் நுகர்வோரை உருவாக்குவதுதான் இலக்கு என்ற அடிப்படையில் டாஸ்மாக்கிற்கு தனது குடிமக்களை வாழ்நாள் நுகர்வோராக்கி சாதனை படைத்திருக்கிறது தமிழக அரசு என்னும் வெற்றிகரமான வியாபாரி.
'இளைப்பாறுவதற்காக, மகிழ்ச்சிக்காக, த்ரில்லுக்காக, தனிமைக்காக, அலுப்பிற்காகக் குடிக்க வருகிறவர்களை முழு நேர குடிகாரர்களாக்கி அவர்களை வாழ்நாள் முழுவதும் மதுவின் நுகர்வோராக்குவதுதான் தமிழக அரசின் திட்டம். கட்டுப்பாடில்லாமல் குடிக்க வேண்டுமென்பதற்காகத் தான் அது பார்களை திறந்து வைத்திருக்கிறது. வெறும் கடைகள் மட்டுமிருந்தால் தன் தேவைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைத்து குடிப்பார்கள். பார்களைத் திறந்து வைத்து இத்தனை கேஸ்களை விற்றும் ஆக வேண்டும் என்று சொல்வதால் வருவோரை எல்லாம் அதிகம் குடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு வந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பவர்களை அவர்கள் தடுப்பதே இல்லை' என்கிறார் நாராயணன்.
'இளைப்பாறுவதற்காக, மகிழ்ச்சிக்காக, த்ரில்லுக்காக, தனிமைக்காக, அலுப்பிற்காகக் குடிக்க வருகிறவர்களை முழு நேர குடிகாரர்களாக்கி அவர்களை வாழ்நாள் முழுவதும் மதுவின் நுகர்வோராக்குவதுதான் தமிழக அரசின் திட்டம். கட்டுப்பாடில்லாமல் குடிக்க வேண்டுமென்பதற்காகத் தான் அது பார்களை திறந்து வைத்திருக்கிறது. வெறும் கடைகள் மட்டுமிருந்தால் தன் தேவைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைத்து குடிப்பார்கள். பார்களைத் திறந்து வைத்து இத்தனை கேஸ்களை விற்றும் ஆக வேண்டும் என்று சொல்வதால் வருவோரை எல்லாம் அதிகம் குடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு வந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பவர்களை அவர்கள் தடுப்பதே இல்லை' என்கிறார் நாராயணன்.
நாராயணனின் இந்த குற்றச்சாட்டை ஆமோதிக்கிறார். தர்மபுரி மாவட்ட டாஸ்மாக் கடையில் பணிபுரியும்
பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், காலையில் கடை திறக்கும் போதே கூட்டம் கூட்டம் குடிக்க வந்துவிடுகின்றனர். இதனால் போலி சரக்கு விற்பனை சர்வசாதாரணமாக நடக்குகிறது. கேட்கும் பிராண்ட்களை தருவதற்கு கூடுதல் பணம் வசூலிப்பது வழக்கமான ஒன்று. பணம் தர மறுத்தால் சரக்கு கிடைக்காது. இது குறித்து போலீசுக்கு போனாலும் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. ஏனென்றால் போலீஸுக்கும் கமிஷன் உண்டு. இரவு 10
மணிக்கு மேல் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும்
25% அதிக விலை வைத்து விற்கிறோம். ‘' என்கிறார்.
கடந்த ஆண்டு பிடிபட்ட போலி மது பாட்டில்களின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டுகிறது. தமிழக அரசின் மதுக் கொள்கையில் கள்ளச் சாராய ஒழிப்பு குறித்துதான் விளக்கப்பட்டிருக்கிறது. பொதுவான மதுக் கட்டுப்பாட்டிற்கான எந்த விதிமுறையும் இல்லை. 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுவை விற்கக் கூடாது, பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களில் இருந்து 50 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகளை அமைக்கக் கூடாது என்ற இரண்டே விதிகள் சடங்கிற்காக இருக்கின்றன. ஆனால் கிராமம் நகரமென்ற பாகுபாடில்லாமல் எந்த டாஸ்மாக் கடையிலும் 21 வயதிற்குட்பட்டவர்கள் மது வாங்கிச் செல்வதையும் அருந்துவதையும் பார்க்க முடியும். பள்ளிச் சீருடைகளுடனே கூட டாஸ்மாக் கடைகளுக்கு வருகின்றனர் மாணவர்கள். இதுவும் போகிற போக்கில் வைக்கப்படுகிற குற்றச்சாட்டு அல்ல. சென்னை மருத்துவக் கல்லூரி அண்மையில் நடத்திய சமூக சுகாதார ஆய்வில் சென்னை புழல் பகுதியில் உள்ள 40 பள்ளி மாணவர்களிடம் ஆய்வு செய்ததில் 13-16 வயதிற்குட்பட்டவர்களில் 11% பேர் மதுவுக்கு அறிமுகமாகியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மது பழக்கத்திற்கு அடிமையானோரில் கணிசம் பேர் சிரோசிஸ் உள்ளிட்ட மிகக் கொடுமையான கல்லீரல் நோய்களுக்கும் சைக்கோசிஸ் போன்ற பல வகையான மன நோய்களுக்கும் ஆட்படுகின்றனர். தமிழகத்தில் இது குறித்த ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகம் முழுவதும் தெருவுக்கு தெரு கடைகளை திறந்து வைத்திருக்கும் தமிழக அரசு மக்களிடையே நிலவும் குடிப் பழக்கத்தின் தீவிரம் குறித்தோ அது சமூகத்தில் உண்டாக்கியிருக்கும் பாதிப்புகள் குறித்தோ தெரிந்து கொள்ளக் கவலைப்படாமல் இருப்பது சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘மதுவால் 60 வகையான நோய்கள் உருவாகின்றன. மதுவில் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் மூன்று வகையான பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று அது ஒரு நச்சுப் பொருள், இரண்டாவது போதையை உண்டாக்கக் கூடியது மூன்றாவது அடிமைப்படுத்தும் குணம் கொண்டது. இப்படியொரு பொருளை அரசு எப்படி தன் மக்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்க முடியும் என்று கேட்கிறார் நாராயணன்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிற நிலையில் இந்தியாவில் அது கட்டற்று அதிகரிக்கிறது. உண்மையில் இந்தியர்களுக்கு குடிக்கத் தெரியாததே இந்த அவலத்திற்கு காரணம்.
‘என்னிடம் சிகிச்சை வரும் நிறைய பேர் பிராந்தி இதயத்திற்கு நல்லதுதானே என்று கேட்கின்றனர். இப்படி கேட்பவர்கள் அத்தனை பேரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு குவார்ட்டராவது குடிக்கக் கூடியவர்கள். குடி குறித்து நம்மிடையே நிலவும் அறியாமை அதிர்ச்சியளிக்கக் கூடியது. சோஷியல் டிரிங்கிங் என சொல்லக் கூடிய என்றோ ஒரு நாள் ஒரு 30 மில்லி, 60மில்லி எடுத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமானது. தினம் தினம் போதை தலைக்கேறும் வரை குடிப்பது உடலில் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும் என்ற உண்மை கூட மக்களுக்குத் தெரியவில்லை. . அரசு மதுவை விற்பது தவறில்லை. ஆனால் எப்படிப்பட்ட மக்களுக்கு விற்கிறோம் என்பதில் சிறிதளவேனும் அது அக்கறை கொள்ள வேண்டும். மாபெரும் அறியாமையில் இருக்கும் மக்களை அதிலிருந்து விடுவிக்கக் கடமை அரசுக்கு இருக்கிறது'' என்கிறார் மோகன் வெங்கடாசலபதி.
மது போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிற நிலையில் குடிநோயை குணப்படுத்த வேண்டிய மனநல மருத்துவர்களுக்கும் போதை மீட்பு மையங்களுக்கும் தமிழகத்தில் பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு சார்பில் ஒரு போதை மீட்பு மையம் கூட நடத்தப்படவில்லை. ஆங்காங்கே இயங்குகின்ற ஒன்றிரண்டு மையங்கள் குடியை நோயாக புரிந்து கொள்ளாமல் நோயாளிகளை தாக்குவது கட்டிப் போடுவது போன்ற கடுமையான சிகிச்சை முறைகளை கையாள்கின்றன.
'நிறைய கிடைக்கிறது நினைத்த நேரத்தில் கிடைக்கிறது என்பதற்காக ஒருவர் குடிபோதைக்கு அடிமையாவதில்லை. நகரமயமாக்கல் அழிந்துவரும் மனித நேயம் என பல காரணங்கள் ஒருவரை குடிக்கு அடிமையாக்குகிறது. மன அழுத்தமும் வாழ்வியல் நெருக்கடிகளும் அதில் பெரும்பாங்காற்றுகின்றன. மன அழுத்தம் மிகுந்த ஒருவர் அதிலிருந்து விடுபடும் வழி தெரியாததாலேயே மதுவை நாடத் தொடங்குகிறார். குடி போதையிலிருந்து ஒருவரை மீட்க இந்த புரிதல்கள் அவசியம்' என்கிறார் மோகன் வெங்கடாசலபதி.
அரசு கணக்கின்படி டாஸ்மாக்கின் வருவாய் உயர்விற்கு நிகராக ஆண்டுதோறும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இது தவிர தொழிற்சாலைகளில், கட்டிடத் தொழிலில், விவசாய த் தொழிலில் ஐடித் துறையில் என குடியால் உண்டாகும் உயிரிழப்புகள் மற்றும் உடல் உபாதைகளுக்கு கணக்கே இல்லை. இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளவோ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவோ அரசு துளியதரப்பில் துளியளவிலான முயற்சிகளும் இல்லைு இதனாலேயே அரசு வருவாயை மட்டும் கணக்கில் வைக்கிறது. மனித வள இழப்பை போன்ற பேரிழப்பு ஏதும் ஒரு சமூகத்திற்கு இருந்துவிட முடியுமா?
கர்நாடகத்தில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து 1999ல் நடத்திய ஆய்வில் ஒரு மாநிலத்தில் ஐந்து லட்சம் குடி நோயாளிகள் இருந்தால் அரசுக்கு வரும் வருவாய் ரூ.846 கோடி. பதிலுக்கு நோயை குணப்படுத்த அரசும் பாதிக்கப்பட்டோரும் செய்யும் செலவுத் தொகையும் வேலையின்மை, விடுப்பால் உண்டாகும் இழப்பும் சேர்த்து ரூ. 1838 கோடி . அப்படியெனில் தமிழகத்தின் சுமார் ஒரு கோடி குடிகாரர்களால் உண்டாகும் வருவாய் இழப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
உயிரிழப்பும் நோய்களும் மட்டுமல்ல குடியால் தமிழகத்தில் சமூக சீர்கேடுகளும பெருகியிருப்பதை சுட்டிக் காட்டுகின்றன தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பல ஆய்வுகள். குடி போதை என்பது ஆணாதிக்க சமூகத்தின் குறியீடு என்ற பட்சத்தில்குடும்ப, சமுக பாலியல் ரீதியாக தமிழக பெண்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
ஒய் ஆர் ஜி கேர் என்ற நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள 40 குடிசைப் பகுதிகளில் 1974 பெண்களிடம் நிகழ்த்திய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிக்கக் கூடியது. 99.4% பெண்கள் தாங்கள் கணவரின் வன்முறைக்கு ஆளாவதாகவும் 74.9% பெண்கள் விருப்பமில்லாமல் கணவனால் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் இவ்வாறு நடப்பதற்கு குடிபோதைதான் முதன்மை காரணம் என 95.77% பெண்கள் கூறியுள்ளனர்.
எய்ட்ஸை தடுக்க அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களின் விளைவாக பாது காப்பான உடலுறவு குறித்து அபடிக்காதவர்கள் கூட புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் குடிப்பழக்கம் அந்த விழிப்புணர்வின் பலன்களையும் சிதைப்பதை சுட்டிக் காட்டுகிறார் நாராயணன்.
‘பெருகும் குடிபோதையால் எச் ஐவி எய்ட்ஸும் பெருகும் ஆபத்தான நிலை உருவாகி இருக்கிறது. டாஸ்மாக் பார்கள் ஏறக்குறைய சிவப்பு விளக்கு பகுதியைப் போல நிலவுகின்றன. அதற்குள் ஒரு பெண் செல்வதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்தளவுக்கு கவுரமில்லாத ஆபாசம் மிகுந்த அறுவறுப்பான பகுதியாக பார்கள் இயங்குகின்றன. குடியையும் பெண்ணையும் போதையாக கருதும் ஆணாதிக்க ம னோபாவத்தை அரசு நடத்தும் மதுக் கடைகளே வளர்த்தெடுக்கின்றன. டாஸ்மாக் பார்களில் நிர்வாணப் பெண்களின் போஸ்டர்கள் பெரிது பெரிதாக ஒட்டப்பாட்டிருப்பதே இதற்கு சாட்சி. குடி போதையை ஏற்றி, பாலியல் இச்சையை தூண்டுவது ஓர் அரசு செய்யக் கூடிய செயலா? பின் எப்படி அது பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் என்கிறார் அவர்.
ஆனால் குடியால் தமிழ் சமூகம் சந்திக்கும் இந்த சமூக சீர்கேடுகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பெரு முதலாளியைப் போல நடந்து கொள்கிறது தமிழக அரசு. குறைந்தபட்சம் ஒரு தொழிலை நடத்துவதற்கான நெறிமுறைகளை கூட பின்பற்றாத அதன் அசட்டையைப் பார்த்தால் தான் ஓர் அரசு என்பதையே அது மறந்துவிட்டதாகவே தெரிகிறது. ஆங்காங்கே சில பெண்கள் அமைப்புகளும் , ஊர் பொது மக்களும் டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்று போராட்டம் நடத்துகின்றனர். பா.ம.க மதிமுக, காந்திய மக்கள் இயக்கம் போன்றவை முற்றிலுமான மதுவிலக்கை வலியுறுத்துகின்றன.
‘திராவிடக் கட்சிகள் டாஸ்மாக் வருவாயை வைத்துதான் மக்கள் நலத் திட்டங்களையும் இலவசத் திட்டங்களையும் செயல்படுத்த முடிகிறது எனக் கூறுகின்றன. தமிழக அரசு ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் இலவசங்களின் மதிப்பு வெறும் 16 ஆயிரம் ரூபாய். மாறாக குடும்பத்தில் ஒருவர் நாளொன்றுக்கு ஒரு குவார்ட்டர (70 ரூபாய் என வைத்துக் கொண்டால்) ் மதுவை குடிப்பதன் மூலம் அரசு அதே குடும்பத்திடமிருந்து ்ரூ.1,26 ஆயிரத்தை எடுத்துக் கொள்கிறது.
18 ஆயிரம் கோடி என்பது லாபம் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 ஆயிரம் கோடிக்கு தமிழ் சமூகம் குடியில் கொட்டுகிறது. இந்த பணம் மக்களிடமே இருக்குமானால் அரசு இலவசங்கள் கொடுக்கவே தேவை இல்லையே என்கிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன். முற்றிலுமான மதுவிலக்கு என்பது சாத்தியங்கள் அற்றது. அரசுக்கு அதன் மூலம் வருவாய் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மக்களின் ஆரோக்கியத்தையும் சமூகத்தின் மனித வளத்தையுமே அதற்கு விலையாகக் கொடுக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. மது மூலம் கிடைக்கும் வருவாயை முதன்மையானதாகக் கொண்டாடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதிகபட்ச வருவாயை அரசுக்கு ஈட்டும் அதன் மதுக் கொள்கையை திருத்தி மக்களை மதுத் தீங்கில் இருந்து காப்பாற்றும் மதுக் கட்டுப்பாட்டுக் கொள்கையை அவை வரையறுக்கக் கோருகின்றன.
காற்று நிலம் நீர் என அத்தனையிலும் ஊழல் செய்து லாபம் பார்த்துப் பழகிப் போன அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் அரசு அதிகாரிகளும் சமூக விரோதிகளும் மரண வியாபாரிகளாகி மதுவின் மூலமாக மனித உயிர்களை காவுகொண்டு பணமீட்டத் தொடங்கிவிட்டனர். சத்தமில்லாமல் பெருகி நிற்கும் குடி நோய் என்னும் சமூக சீர்கேட்டிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் காலகட்டம் வெகுதொலைவில் இல்லை.
இந்த கட்டுரையின் ஆதாரமான தகவல்களும் புள்ளிவிபரங்களும்
2012 ஆம் ஆண்டிற்கானது.
நன்றி :இந்தியாடூடே
டாஸ்மாக் செய்திகள்: இக்கட்டுரை
இந்தியாடூடே ல் 2012ல் வெளியானது. இன்றைய மக்கள் தன்னெழுச்சி போராட்ட நிலையை அன்றே எழுத்தாளர் ஜெயராணி குறிப்பிட்டு
எழுதியதும் இன்றைய நிலையில் அனைவரும் படிக்க பரப்ப வேண்டிய ஆய்வுகட்டுரை.
நன்றி: எழுத்தாளர் ஜெயராணி
மயில்வாகணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக