திங்கள், 30 அக்டோபர், 2017

பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா?

சமீப காலமாக  நெடுஞ்சாலை  மதுக்கடைகள் தொடர்பான நீதிமன்றங்களின் தீர்ப்பு மாறிமாறி வந்து மக்களை குழப்புகின்றது. நீதிதேவன் மயக்கம் மது விசயத்தில் கொஞ்சம் இருக்கத் தானே செய்யும் என்கிறீர்களா? தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக  படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவதாக அனைத்து  அரசியல்வாதிகளும் (மதுகம்பெனி முதலாளிகள்) வாக்குறுதி அளித்தனர். அம்மா ஆட்சி அமைந்தது.

அம்மா ஆட்சியில் பெயருக்கு 500 கடைகள் அடைக்கப்பட்டன. பின்பு அம்மா நோய்வாய்ப்பட்டு மரணித்தார்.




அதற்கு பின்பு OPS, EPS ஆட்சிகள் தொடர்கின்றன. ஆட்சிக்கு வந்த எடப்பாடி  500 டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றார். உச்சநீதிமன்றம் தன் பங்கிற்கு மார்ச் 31க்குள் நெடுஞ்சாலை மதுக்கடைகள் அடைக்கப்பட வேண்டும்.  

மேலும் நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தள்ளியே கடைகள் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பு கூறியது. கடைகளின் எண்ணிக்கை 6700லிருந்து 3200க்கு  குறைந்தது. தீர்ப்பை கேட்ட உடன் பல மாநிலங்கள் நெடுஞ்சாலைகளை மாநில சாலைகளாக மாற்றினர்.

இது தொடர்பான வழக்கில் மீண்டும் உச்சநீதிமன்றம் சாலை மாற்றங்களை அங்கீகரிப்பது போன்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. இதற்கிடையே ஊருக்கு வெளியே நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட மதுக்கடைகள் பல உள்ளூர்களுக்குள்ளும் விவசாய நிலங்களிலும் செயல்பட்டன.

இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் மதுக்கடைகள் சூறை, ஊழியர்களுக்கு அடி, சாலை மறியல்கள் நடைபெறுகின்றன. சமீபமாக இந்த செய்தி இடம் பெறாத பகுதிகளும் செய்தி தாள்களும் இல்லை. எப்பொழுதும் சாலை மறியல், கடையடைப்பு என்றவுடன் அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்படும். பின்பு தீயிட்டு கொளுத்தப்படும்.

அரசு நிறுவனங்கள் மீதான தாக்குதல் அனைவருக்கும் அல்வா சாப்பிடுகின்ற மாதிரி தான். அதே போன்று தான் டாஸ்மாக் கடைகள் சூறை. வடிவேலு நகைச்சுவை போல் பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா? என கேட்டு கேட்டு உடைக்கின்றனர். தகவல் சொல்லிவிட்டு உடைக்கின்றனர். அந்த நகைச்சுவையில் உள்ளவர் போல் தமிழக அரசு ஆட்சியாளர்கள்  உறக்கத்தில் இருப்பது போல் அசட்டையாக இருந்து வருகின்றனர்.

அடி உதை வாங்குவது என்னவோ டாஸ்மாக் ஊழியர்கள் தான். உடைக்கப்பட்ட பாட்டில்கள், பொருட்களுக்கு பல இடங்களில் நஷ்ட ஈடு கட்டியது என்னவோ டாஸ்மாக் ஊழியர்கள் தான்.    இந்த நிலை என்று மாறுமோ?  தற்பொழுது  மீண்டும் புதிதாக கடைகள் திறக்கும் பணி துவங்கிவிட்டது.  தங்கள் வேலையை பாதுகாக்க புதிய கடைகளுக்கு இடம் பார்க்கும் டாஸ்மாக் ஊழியர்கள் இந்த பார் உரிமையாளரிடம் படும் அவஸ்தைகள் சொல்லில் அடங்காது.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரிடம் அல்லல் படும் வேலையில் ஊழியர்கள் பலரும் தங்களது வாழ்நாட்களை பல நோய்களுக்கு இடமளித்து மரணித்து வருகின்றனர்.

 நாளை முதல் குடியை விட்டுவிடுவதாக கூறும் மதுஅடிமைகளுக்கு ஒப்பாக, மதுவிலக்கை நோக்கி பயணிப்பதாய் கூறிவிட்டு மீண்டும் பல கடைகளை திறக்கும் தமிழக அரசும் மதுவுக்கு அடிமையாய் உள்ளதோ என சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

வருமானம் கொடுத்த டாஸ்மாக் ஊழியர்களின் மானம் காக்க என்று தான் இந்த அரசு உறக்கத்திலிருந்து விழிக்குமோ? நாமும் செவிடன் காதில் சங்கை ஊதுவோம் தொடர்ந்து…….

                                          வ.ஷாஜஹான்,எம்.ஏ.,
                                                9942522470.