(தள்ளாடும் தமிழகம் 2)
‘ தமிழகத்தில் இப்போது மதுதான் மாஃபியா. அரசு, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள் சமூக விரோதிகள் இவர்கள் அனைவரும் சேர்ந்தே டாஸ்மாக்கை நடத்துகின்றனர். அரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கு சமூக விரோதிகளுக்கும் டாஸ்மாக் மூலம் பணம் கொட்டுகிறது. 2003க்கு முன்பு வரையிலும் மது விற்பனையிலிருந்து தமிழகத்திற்கு 20-30 கோடிதான் கிடைத்து வந்தது. தமிழகம் முழுவது, சுமார் 7 ஆயிரம் கடைகளைத் திறந்து சில்லறை வர்த்தகத்தில் அரசு இறங்கியதும் அதன் வருவாய் உயரத் தொடங்கியது. 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை கடந்து கூடுதலாக ஒரு பத்து ஆயிரம் கோடியாவது அரசியல்வாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் போகிறது'' என இந்தியா டுடேவிடம் தெரிவித்தார் சமூக ஆர்வலரும் தமிழகத்தின் மதுக் கொள்கை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவருமான நாராயணன்.
2003 ஆம் ஆண்டு சில்லறை வர்த்தகத்திற்குள் நுழைகிற வரை வெறும் 4 நிறுவனங்களிடமிருந்துதான் மதுவை கொள்முதல் செய்ததது தமிழக அரசு. அதுவரை அரசியல்வாதிகள் நேரடியாக இந்த வர்த்தகத்தில் இறங்கவில்லை. ராமச்சந்திர உடையாரின் நிறுவனமான மோகன் ப்ரூவரீஸ், புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான எம்.பி குழும நிறுவனம், விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் மற்றும் பழனி அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த எஸ்.வி.பாலசுப்ரமணியனின் சிவா டிஸ்டில்லரீஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் மது உற்பத்தி செய்தன.



