வெள்ளி, 29 மார்ச், 2013

ரொட்டி முந்தியா? ‘புட்டி’ முந்தியா?



ரொட்டி முந்தியா? ‘புட்டி’ முந்தியா?



மட்டகரமான சரக்குகளை மண்டி விட்டு, நடுரோட்டில் மட்டையாகிக் கிடக்கிற குடிகாரப் பக்கிகள், நிமிர்ந்து உட்கார்ந்து காலரை நிமிர்த்தி விட்டுக்  கொள்ளும் படியான தகவல் இது.


மனிதனை மதி மயங்கச் செய்கிற லாகிரி வஸ்துவான மது, ஏதோ இன்று, நேற்றைய கண்டுபிடிப்பல்ல. ஆதி மூதாதையர் காலம் தொட்டு, மனித இனத் தின் மிக நீ...ண்ட வரலாற்றுப் பயணத்தில், நிழல் போல அதுவும் இணைந்தே நம்முடன் நடந்து வந்து கொண்டிருக்கிறது. ‘கோழி முந்தியா; முட்டை  முந்தியா’ என்பது குழப்பவாதிகள் காலம், காலமாக போட்டுக் கொண்டிருக்கிற விடுகதை. ஆனால், மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்டத் துக்குப் போய் விட்டார்கள். அவர்களது லேட்டஸ்ட் ஆய்வுப்படி, பூமியில் தானியங்களைக் கொண்டு மனித இனம் உணவுப்பொருட்களை தயாரிப்பதற்கு  முன்னதாகவே, ‘ஒரு குவார்ட்டர் தயார் பண்ணிக் கொடு மாமு’ என்று ‘ஆர்டர்’ கொடுக்கிற லெவலுக்கு உச்சக்கட்ட நாகரீகத்தில் உயர்ந்து நின்றி ருக்கிறார்கள் என (திட்டவட்டமாகவே) தெரியவந்திருக்கிறது.




காடு, மலைகளில் பரதேசியாக திரிந்து கொண்டிருந்த மனிதனுக்கு, மரம் செடிகளில் காய்த்துத் தொங்குகிற பழங்கள் மற்றும் காய்களே உணவாக இ ருந்தது ஒரு காலம். அதை கற்காலம் என வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. தினமும் ஒரே காயையும், பழத்தையும் சாப்பிட்டு, நாக்குச் செத்துப்  போன நமது மூதாதையர்களில் ஒரு சில முற்போக்காளர்கள், சமூக மாற்றம் விரும்பிகள், புதிதாக சில தானியங்களை ருசி பார்த்து விட்டு ‘யுரேகா’ என  உற்சாக கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். வழக்கமாக, வயிற்றை மட்டுமே நிறைக்கிற தானியமாக அது இல்லாமல், கூடவே கட்டுக்கடங்காத குஷியையும்,  உற்சாகத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது. ‘அதை’ ஒரு வாய் மென்று விட்டுப் போனால், தரையில் கால் படாமல் மிதக்கிற ஒரு உணர்வு வந்ததால்,  அந்த தானியத்துக்கு ஒரு ‘விஐபி’ அந்தஸ்து உடனடியாக கிடைத்தது.


அனேகமாக அந்தத் தானியம், இப்போது நாம் பயன்படுத்துகிற மக்காச்சோளம் அல்லது அதன் மிக முந்தைய வடிவமாக இருக்கலாம் என  மெக்சிகோவில் உள்ள மனித இன ஆய்வுக்கழக நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தத் தானியத்தை சற்றுப் பதப்படுத்தி, திரவப் பொருளாக  மாற்றி வைத்துக் கொள்வதன் மூலம் ஆடு, மாடுகளுடன் காடு மேடுகளெல்லாம் அலைந்து, திரும்பும் போது தாக சாந்தி செய்து களைப்பைப் போக்கிக்  கொள்ள கற்கால மனிதனால் முடிந்திருக்கிறது. ‘அலைஞ்ச களைப்பெல்லாம், தொலைஞ்சே போச்சே’ என்று ஒருவருக்கொருவர், அந்த பானத்தை  பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, பகல் பொழுதில் அலைந்த களைப்புத் தீர, இரவுகளில் தீ மூட்டி குளிர் காயும் நேரங்களில் இந்தப் பானத்தை ருசி  பார்த்து விட்டு, பின்னர் மனம் போன போக்கில் ஆட்டமாடித் தீர்த்திருக்கிறார்கள். இன்றைய நமது உற்சாக பானத்தின் துவக்கப் புள்ளி அதுதான்.


மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் மிகவும் சிறந்தது இதுதான் என குடிகார சமுதாயம் கொண்டாடித் தீர்க்கவேண்டிய இந்த விஷயத்தை, கனடாவின்  சைமன் ஃபிரேஸர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரெய்ன் ஹெய்டன் மற்றும் அவரது ஆராய்ச்சியாள சகாக்கள் ஆதாரத்துடன் உறுதி செய்தி ருக்கிறார்கள். இதுகுறித்த அவர்களது மிக விரிவான கட்டுரை இந்த மாதத்தின் (மார்ச், 2013) ‘ஜர்னல் ஆஃப் ஆர்கியாலஜிகல் மெதட் அண்ட் தியரி’  வெளியீட்டில் பதிவாகியிருக்கிறது. ‘‘தானியங்களை பக்குவப்படுத்தி, பீர் (அல்லது ஒய்ன்) போன்ற திரவ வடிவத்தில் தயாரித்து ஸ்டாக் வைத்துக்  கொள்ளும் இந்தப் பழக்கம், கற்காலத்தின் கடைசிக் கட்டத்திலேயே அறிமுகம் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில், தானியங்களை உணவுப் பண்டங்கள £க, (அதாவது ரொட்டி போல) தயாரித்து ருசி பார்க்க, மனித இனம் பழகியிருக்க வில்லை,’’ என்கிறார்கள் பிரெய்ன் ஹெய்டன் குழுவினர். ரொட்டிக்கு  முந்தியே, புட்டி வந்து விட்டது!


அதாவது, சற்றேறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, உற்சாக பானம் தயாரித்து ஸ்டாக் வைத்துக் கொள்ளும் பழக்கம் மனித இனத்திடம்  தோன்றி விட்டது. ‘ஸ்டாக்கை இன்னுமா கிளியர் செய்யலை...? சஸ்பெண்ட் அடிச்சிருவேன்!’ என்று டார்கெட் போட்டு மண்டை குடைச்சல் கொடுக்கிற  பழக்கங்களெல்லாம், நல்லவேளையாக அந்த நாகரீக மனிதர்கள் காலத்தில் இல்லை!

டாஸ்மாக் செய்திசேகரிப்புக்குழு

கருத்துகள் இல்லை: