ஞாயிறு, 9 ஜூன், 2013

கிளப் சூது கவ்வும்.





தமிழகத்தில் புதிய கலச்சாரநடவடிக்கையாக மனமகிழ்மன்றங்கள் (ரெக்ரியேஷன் கிளப்)  நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இந்த மனமகிழ்மன்றங்கள் துவக்கத்தில் பண்டிகை கொண்டாட்டம்,நம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகள்,  கிளப் உறுப்பினர்கள் முன்னேற்றபணிகள் முதலியவைகளும், புத்தகம் மற்றும் செய்திதாள் படிப்பிற்கு நூலகம் அமைத்தும்,கிளப் உறுப்பினர்களால் டென்னிஸ்,பூப்பந்து,செஸ்,கேரம்,பில்லியர்ட்ஸ் போன்றவைகள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருவதற்காக அமைக்கப்படுவதாக கூறி அமைத்த பின்பு சீட்டாட்டத்தினை முக்கியமாக கொண்டு இயங்கிவந்தது. இதனை பலரும் கண்டுகொள்வதில்லை. சிலநேரங்களில் சீட்டாட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கைகலப்பிற்கு வந்து காவல்நிலையம் வரை வந்தாலும் இதை பயன்படுத்துபவர்களும் நடத்துபவர்களும்  மேல்தட்டு மக்களாய் இருப்பதால் பிரச்சனைகள் மூடிமறைக்கப்படும்.ஆனால் சமீப காலங்களில் கிளப்களில் நடைபெறும் வரம்புமீறிய  பிரச்சனைகள் செய்திதாள்களில் அடிக்கடி வரக்காரணம் மது. இந்த கிளப்களினால் டாஸ்மாக்கினை மிஞ்சும் அளவிற்கு மது கிடைப்பதே பிரச்சனையின் துவக்கமாகும்.

மனமகிழ் மன்றங்கள்(ரெக்ரியேஷன் கிளப்) அமைக்கும் முறை.

இந்த கிளப்கள் அமைக்க முதலில் விசாலமான கட்டிடமும்,மைதானமும்,25 உறுப்பினர்கள் இவர்களுக்கிடையே தலைவர்,செயலாளர்,பொருளாளர் போன்ற பொறுப்புடன் நிர்வாகிகளுமிருந்தால் மாவட்ட கலால் துறையினரின் பரிந்துரையில் சென்னை கலால் துறை கமிஷனர் அனுமதியுடன் கிளப்பினை நடத்தலாம்.இந்த கிளப் அனுமதிவிசயத்தில் சென்ற ஆட்சியாளர்களும் தற்போதைய ஆட்சியாளர்களும் சிலபல லட்சங்களே அனுமதியின் தகுதியாக கொண்டதனால்  போட்ட பணத்தினை எடுக்கும் நோக்கோடு எல்லாவிதமான முறைகேட்டினையும் கிளப் முதலாளிகள் தற்பொழுது அரங்கேற்றிவருகின்றன.

கிளப் மதுவும் சூதும்.

கிளப்களில் உள்ள உறுப்பினர்களுக்கு மது அருந்த அனுமதியளிக்கும் கலால் துறையினர் டாஸ்மாக் மேலாளர் மூலமாக உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆறுபேருக்கு ஒரு புல் பாட்டில் வீதம்(750 ) வழங்க அனுமதியளித்துள்ளது.இது போதாதா ஊழல் உரைகளுக்குள் மூழ்கியிருக்கும் நமது டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உறுப்பினர் எண்ணிக்கையாவது மண்ணாவது? டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் சரக்கின அளவினை விடவும் நன்றாக ஓடக்கூடிய சரக்கு வந்தாலும் உடன் கிளப் ஓனருக்கு அழைப்பு கொடுத்து சரக்கினை ஏற்றிவிடும் பாங்கினை பார்த்தால் பண்டைய அடிமைகள் தோற்றார்கள் போங்கள். இந்த கிளப் ஓனர்கள் தற்பொழுது கிளப் நடத்துவதினை விட பார்  நடத்தி பணம் பார்க்கின்றனர். கிளப்கள் அனைத்தும் தற்பொழுது தங்களது முகப்பு பலகையில் கிளப் என்பதினை விட அனுமதிக்கப்பட்ட பார் என்றே எழுதி தொங்க விடுகின்றனர். இந்த கிளப்களில் மதுவானது எல்லா நாட்களிலும் விடுமுறை யின்றி அதாவது டாஸ்மாக் விடுமுறை நாட்களான காந்தி ஜெயந்தி,வள்ளலார் தினம் உட்பட அனைத்து நாட்களும் குடித்துமகிழலாம். இதற்கென வழக்கு நடத்தி சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்கள் கிளப் முதலாளிகள் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.பல டாஸ்மாக் பார் ஓனர்கள் டாஸ்மாக்கிற்கு வருடம் தோறும் பார் ஏலமும் கட்சிகாரர்களுக்கு வேறு பணத்தினை அழவேண்டி இருப்பதால் நாமும் கிளப்பே நடத்தி பணம்பார்க்கலாம் என அதிகாரிகளுக்கும்,
அரசியல்வாதிகளும் பெரும் தொகையினை கொடுத்து பார்கள் எல்லாம் கிளப்களாக மாறிவருகின்றன.மதுவிற்கு அடுத்தப்படியாக கிளப்களில் சீட்டாட்டத்தினை கொண்டும் பெரும் அளவு பணம் சம்பாதிக்கின்றனர்.கிளப்பில் பணத்திற்கு சீட்டாட்டங்கள் விளையாட கூடாது என்று இருந்தாலும் எந்த சட்டங்களை மதித்தார்கள் இவர்கள் இதனை மதிக்க?கிளப்களுக்கு தகுந்தார்போல சூது நடைபெறுகின்றது.நாள் ஓன்றுக்கு ஊரக பகுதிகிளப்பாக இருந்தால் சுமார் 5லட்சம் புழக்கமும் நகர்புற கிளப்பாக இருந்தால்சுமார் 10 லட்சமும் புழங்குவதாக கூறுகின்றனர்.சீட்டாட்டத்திற்கு முக்கியமானது மூளையின் செயல்பாடு.ஆனால் அதனை ஆல்கஹால் கொண்டு மந்தப்படுத்தி விட்டு சூது விளையாட கிளப்பில் சம்பளத்திற்காக அமைக்கப்பட்ட கைதேர்ந்த சீட்டாட்டகாரர்களிடம் பணம் இழக்கும் கொடுமை தொடர்கிறது.

மதுரை சம்பவம்.

சென்ற மாதத்தில் மதுரையில் பெரியார் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் செயல்படக்கூடிய யுனைடெட் கிளப் பில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றதாக 41 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.அவர்கள் விபரம் வருமாறு
5 பேர் கிளப் ஊழியர்கள்
17 பேர் வர்த்தகர்கள்
2 பேர் காவல்துறை கண்காணிப்பாளர்கள்(ஓய்வு)
1
நபர் காவல் இன்ஸ்பெக்டர்(ஓய்வு)
3
பேர் டாக்டர்கள்
2 பேர் ஆசிரியர்கள்
4 பேர் வழக்கறிஞர்கள்
1 நபர் ஆவின் அதிகாரி
2 பேர் பொறியாளர்கள்(ஓய்வு)
3
பேர் ரயில்வே ஊழியர்கள்
1 நபர் கோவில்பூசாரி (ஓய்வு)
இப்படி நகரின் உயர்தட்டு குடிமக்களால் இந்த கிளப்களில் சீட்டாட்டம் நடைபெறுவதோடு இவர்களுக்கு கந்துவட்டியும் கொடுத்து வரும் ஒருகும்பலும் இருந்து வந்துள்ளது.சென்ற ஆண்டில் திருமங்கலத்தில் செயல்படும் ஒருகிளப்பில் சம்பளம் வாங்கி வந்து மாதத்தின் முதல் நாளே மதுவும் சூதுடன் கழித்த ஒருவர் கிளப்பிலேயே கொல்லப்பட அதுவும் காவல்துறைக்கு கொடுக்கவேண்டியதினை கொடுத்து கிளப் அருகில் கொல்லப்பட்டதாக மூடிமறைக்கப்பட்டது.

தீர்வென்ன?

தமிழகத்தில் சூதினை முற்றிலும் ஒழிக்கும் எண்ணம் உடைய நமது முதல்வர் அவர்கள் லாட்டரியினை விரட்டியது போல் கிளப் என்ற பெயரில் நடைபெறும் சீட்டாட்ட சூதினையும் ஒழிக்கவேண்டும். அத்துடன் இந்த கிளப்களுக்கு
கண்டிப்பாக மதுவினை டாஸ்மாக் வழங்கக்கூடாது .இதுவரை டாஸ்மாக்கால் வழங்கப்பட்ட மதுவினை உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பார் போன்று செயல்பட்டு வழங்கியதால் டாஸ்மாக்கிற்கு ஏற்பட்ட நஷ்டத்தினை கிளப் முதலாளிகளிடமும் டாஸ்மாக் அதிகாரிகளிடமும் வசூலிக்கவேண்டும். அத்துடன் அனைத்து கிளப்புகளிலும் சி.சி.டிவி கேமரா பொருத்தி அதனை காவல்துறை கண்காணிக்க வேண்டும்.இறுதியாக தமிழகத்தின் வழக்கத்தில் இருக்கும் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் என்ற இனிய பாரதியின் பொன்மொழிக்கு ஏற்ப சூதினையும் மதுவினையும் ஒழிக்க நம்மால் இயன்ற பரப்புரையையும் விழிப்புனர்வையும் ஏற்படுத்துவோமாக!

1 கருத்து:

இளஞ்செழியன் சொன்னது…

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்... இந்த வரி தமிழகத்தின் வழக்கத்தில் உள்ளதா!!!!!!!!! சிரிப்புதான் வருகிறது.

கட்டுரை முழுக்க மது தொழில் எல்லா இடங்களிலும் எவ்வாறு நிலை கொண்டு உள்ளது என்று சொல்லிவிட்டு இறுதியாக அது என்ன ???

இனிய பாரதியின் பொன்மொழிக்கு ஏற்ப சூதினையும் மதுவினையும் ஒழிக்க நம்மால் இயன்ற பரப்புரையையும் விழிப்புனர்வையும் ஏற்படுத்துவோமாக!

உங்கள் இறுதி எழுத்துகளை மது பாட்டில்களிலும், சிகரெட் டப்பாக்களிலும் உள்ள எச்ச்ச்ச்ச்ரிக்கை வாசகம் போல் இருக்கிறது... ம்ம்ம்ம் நிச்சயம் சூது கவ்வும்... ஆனால் அது எதை கவ்வும், யாரைக் கவ்வும் என்பதும் உங்களை போன்றோர்க்கு மட்டுமே தெரியும்.