புதன், 9 ஏப்ரல், 2014

இன்னும் எத்தனை காவு?

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்துவருகின்ற அதே வேலையில் டாஸ்மாக் பணியாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.
டாஸ்மாக் ஊழியர் அடித்துக் கொலை
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சீரகாபாடி பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் குமார்(வயது37). இவர் மல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இவர் வழக்கம் போல் கடையை மூடி விட்டு மோட்டார்சைக்கிளில் சீரகாபாடிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
வழியில் வீரபாண்டி அருகே கடத்தூர் பி.கே.வளவு என்ற இடத்தில் வரும் போது திடீரென மர்மகும்பல் அவரை வழிமறித்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் குமார் படுகாயம் அடைந்து மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அவர்கள் குமார் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.


மரணம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குமாரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை குமார் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். குமார் தினமும் இரவில் மோட்டார்சைக்கிளில் வருவதை மர்ம நபர்கள் கவனித்து அவரை தாக்கி கொன்று பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உறவினர்கள் கதறல்
கொலையுண்ட குமாருக்கு பூங்கொடி (33) என்ற மனைவியும், 7-ம் வகுப்பு படிக்கும் சசிரேகா(12) என்ற மகளும், 2-ம் வகுப்பு படிக்கும் ராஜேஷ்கண்ணா(9) என்ற மகனும் உள்ளனர். குமாரின் பிணத்தை பார்த்து அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்நிகழ்வினை போன்று தொடர்கதையாக தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஊழியர்களை காவு கொடுத்தவண்ணம் இருக்கின்றனர். சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கே சென்று வங்கி பிரதிநிதிகள் விற்பனை பணங்களை பெற்று செல்வதனை போன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த டாஸ்மாக் சங்கங்கள் அனைத்தும் கோரிக்கை வைத்தும் இதுவரை டாஸ்மாக் நிர்வாகத்தினால் இக்கோரிக்கைகள் ஏற்கபடாமல் உள்ளது. இப்படி டாஸ்மாக் ஊழியர்கள் கொல்லப்படுவதுடன் பத்தாண்டுகள் பணியாற்றியும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்தும், பரிதாபநிலையில் எஞ்சிய வாழ்கையின் நிலைமைப்பற்றியும், பணிசுமை,மனஅழுத்தம் போன்ற காரணங்களை மனதில் கொண்டு டாஸ்மாக் ஊழியர்கள் குடியடிமைகளாக மாறிவருகின்றனர்.ஒரு ஆய்வில் டாஸ்மாக் ஊழியர்களில் 75 சதவீதத்தினர் குடிப்பவர்களாகவும் 10 சதவீதத்தினர் குடியடிமைகளாகவும் இருந்துவருகின்றனர். பத்தாண்டுகளில் சுமார்5000 பேர்வரை மரணித்துவிட்டனர்.
டாஸ்மாக் சங்கங்கள்
டாஸ்மாக் பணியாளர்களுக்கிடையே செயல்படும் சங்கங்கள் தங்களுக்கிடையே ஒற்றுமையுடன் செயல்பட்டு இதுபோன்ற நிகழ்வுகளை அனைத்து மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களிடமும் கொண்டு செல்லவும் , குறைந்தபட்சம் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கம் அனுஷ்டிக்க செய்யலாம். மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திடம் ஒற்றுமையுடன் வேண்டி குடியடிமைகளாக உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு டிஅடிக்ஸன் பிரிவினை ஏற்படுத்தி கவுன்சிலிங் மற்றும் மருத்துவம் பெற செய்யவேண்டியது இன்றைய அவசியமாகும்.


கருத்துகள் இல்லை: