புதன், 9 ஜனவரி, 2013

பண முதலைகள் ஆட்சி! பாரதத்தின் வீழ்ச்சி!


பண முதலைகள் ஆட்சி! பாரதத்தின் வீழ்ச்சி!


சில்லரை வணிகம் துவங்கி அனைத்திலும் அந்நிய மூதலீடு முலம் நம்மை அடிமைநிலைக்கு தள்ளி மீண்டும் சுதந்திரபோராட்டம் நோக்கி நம்மை நடக்க செய்யவிருக்கும் நமது மத்திய மன்மோகன்சிங் அரசு தொழிலாளர்கள் நலச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை பன்னாட்டு கம்பெனிக்கு ஆதரவாக நிறைவேற்ற துடித்தது நாம் அனைவரும் அறிந்ததே.அப்படிப்பட்ட மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சரே மாநில அரசுகள் தொழிலாளர்நலனில் அக்கறை கொள்வதில்லை என்கிறார். மொத்தத்தில் இந்தியா முழுமைக்கும் தொழிலாளர் நலனில் அக்கறையற்ற நிலையே உள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

இந்தியாவில் மத்திய மற்றும் மாநிலத்தில் ஆளும்கட்சியாக தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசியல் செய்யும் அனைத்து கட்சியினரும் பெரும் பணமுதலைகளாக ,தொழிலதிபர்களாக வீற்று இருப்பதால் இயற்கையாகவே தொழிலாளர் நலனுக்கு எதிராகவே சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களாக உள்ளனர்.அரசியல்வாதிகள் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினாலும் ஆளும்கட்சியானவுடன் அதை மறந்து தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன.பாராளுமன்றமும் சட்டமன்றங்களும் உழைப்பென்றால் என்னவென்றே தெரியாத ரெளடிகளையும்,பரம்பரை பணக்காரர்களையும் கொண்டு செயல்படும் வரை தொழிலாளர் முன்னேற்றம் ஒர் காணல் நீரே!
    
                    


தொழிலாளர் நல சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகள் மெத்தனமாக இருக்கின்றன என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற 45-ஆவது தொழிலாளர் நிலைக்குழு கூட்டத்தில் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே வெள்ளிக்கிழமை பேசியதாவது: தொழிலாளர் நலனுக்காக முறையான செயல் திட்டங்களின் மூலமும் வரி வருவாய் மூலமும் பெரும் தொகை ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்தத் தொகையை எந்த மாநிலமும் சரிவரப் பயன்படுத்துவதில்லை.

கட்டுமானத் தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட கீழ் நிலைத் தொழிலாளர்களின் நலனுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகள் மெத்தனம் காட்டி வருகின்றன. அதே போல் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையையும் குறைந்த அளவே மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

பணம் உங்களிடம் இருக்கிறது; நலத் திட்டங்களை நீங்கள் செய்யாவிட்டால் நான் யார் மீது குற்றம் சுமத்த முடியும்? எனவே தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்தபடி நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார். இதையடுத்து, எதிர் வரும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் வேலைக்கு ஏற்ற ஊதியம், பலதரப்பட்ட தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு, வேலைத்திறனையும் மேம்படுத்தும் வழிமுறைகள், முறைசாரா தொழில்துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தம், ஒப்பந்த ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பு போன்றவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தொழிற்சாலை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் மல்லிகார்ஜுன கார்கே.



கருத்துகள் இல்லை: