ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டாஸ்மாக் இடமாற்றம்


டாஸ்மாக் நிர்வாகம் முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்டமேலாளர்களுக்கு கடந்த 21.11.2013 தேதியிட்ட மேலாண்மை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.அதில் சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவருவதை தடுப்பது தொடர்பாக என பொருளிட்டு டாஸ்மாக் கடைகள் பல்வேறு பிரச்சனைகள் காரணங்களால் தொடர்ந்து இடமாற்றங்கள் நடைபெறுவதாகவும் இதனால் அரசிற்கு மிகுந்த வருவாய் இழப்பும் சட்டஒழுங்குபிரச்சனையும் அரசிற்கு அவப்பெயரும் ஏற்படுவதால் இனி எக்காரணத்தினை கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
ஏன் இந்த முடிவிற்கு டாஸ்மாக் நிர்வாகம் தள்ளப்பட்டது?
டாஸ்மாக் கடைகள் ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின் போதும் ஆளும் கட்சிகாரர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது. என்ன  டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்துவதாக தானே மக்கள் நினைகிறார்கள் 


ஆனால் உண்மையில் டாஸ்மாக் கடைகளை ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர்களே எங்கு செயல்படவேண்டும் யார் டாஸ்மாக் பார்களை நடத்தவேண்டும் எனவும் நிர்ணயிக்கின்றனர் இது தமிழக அரசியலில் எழுதப்படாத விதியாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைப்பு நல்குவதால் டாஸ்மாக் கடைகள் இந்த ஆளும்கட்சியினரின் இழுத்த இழுப்பிற்கு கடைகளை நகர்த்தி இதுவரை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமில்லாது பார்களை நடத்துவதற்கு மாவட்டசெயலாளர்களின் டோக்கன் இருந்தால் மட்டுமே பார்ஏலத்தில் கலந்துகொள்ளமுடியும் என்ற நிலை இன்றுவரை தொடர்ந்துவருகின்றது.இந்த மிகப்பெரிய ஊழலை நமது அரசியல்வாதிகளை ஒழித்தால் மட்டுமே ஒழிக்கமுடியம் என்பது டாஸ்மாக் செய்திகள்  தீர்க்கமான முடிவு.

இந்த சுற்றறிக்கை யானது நமது தமிழக அரசியல்வாதிகள் பலரை பலவேறுவிதமாக பேசச்செய்துள்ளது. அவைகளை காண்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்  அவர்கள்
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை எக்காரணத்தைக் கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் இல்லாத ஊர்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள் இப்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவில் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதைக் கண்டித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களாலும், உயர்நீதிமன்ற தலையீடுகளாலும் ஏராளமான மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில் தான் இப்படி ஓர் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. அரசின் இந்த உத்தரவு முற்றிலும் தவறானதாகும்.

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அகற்றும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றும் செயல்பட்டு வரும் நிலையில் எந்த மதுக்கடையையும், எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயலாகும்.

டாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் இடமாற்றம் செய்யக்கூடாது? என்பது குறித்து அந்த உத்தரவில் விளக்கமளித்துள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சவுண்டையா, மதுக்கடைகளை இடமாற்றம் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். மதுக் கடைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக் கேடுகள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கவலையில்லை; அதிக வருவாய் ஈட்டுவது மட்டும் தான் அரசின் நோக்கம் என்பது இந்த உத்தரவில் இருந்து தெளிவாகிறது. மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் மதுவணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்களைக் கொடுத்தாலும் அதனால் சமூகத்திற்கு பயன் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் சில வாக்குகளை வேண்டுமானால் வாங்கலாமே தவிர, மக்களின் வாழ்த்துக்களை ஒரு போதும் வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

மதுவின் தீமைகளால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மது அரக்கன் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விட்டுவிட்டு, மக்களின் உணர்வுகளை மதித்து அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்ததாக வைகோ அவர்கள்
தமிழக மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு ஜெயலலிதாவே பொறுப்பேற்க வேண்டும்.ஈரோடு அருகே டாஸ்மாக் கடையில் மாணவிகள் மது அருந்திய செய்தி கவலை அடையச் செய்கிறது என்றும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம் அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களும், மாணவர்களும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தீர்வுவென்ன?

தற்போதைய இந்த இடமாற்றம் இல்லை என்ற நிகழ்வினை நிர்வாக இயக்குநர் அவர்களால் மாற்றங்கள் பலசெய்து டாஸ்மாக்கினை ஊழலற்ற அமைப்பாக மாற்றம் செய்யும் ஒரு சிறுமுயற்சியாகவே டாஸ்மாக் செய்திகள் தளம் பார்க்கின்றது. ஆனால் டாஸ்மாக் இடமாற்றம் மட்டுமல்ல டாஸ்மாக்கில் ஆளும் கட்சியினரின் தலையீடு பல்வேறுவகையில் நுழைந்து டாஸ்மாக்கினை ஊழலில் ஊறிப்போன அமைப்பாக மாற்றியுள்ளது. இவற்றினை மாற்றிட தமிழகமுதல்வர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மட்டும் முயற்சி செய்தால் போதாது.பத்தாண்டாக உழைக்கும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து பணிஉறுதியினை அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் பொழுதுமட்டுமே ஊழலுக்கு ஏதிராக ஒன்றினைத்து செயல்பட்டு ஊழலை ஒழிக்கமுடியும். டாஸ்மாக்கில் ஏற்படும் நல்லமாற்றங்கள் நல்ல பலனை கொடுக்க அனைத்து தரப்பிலும் முயற்சிக்காமல் மாற்றம் என்பது நிர்வாக நலனில் மட்டும் முயற்சி எடுப்பது மாடி கட்டிடம் கட்ட கட்டிடத்தின் அடிப்பாக செங்கற்களை உருவி எடுத்து கட்டிடம் கட்டுவதற்கு சமமாகும். எனவே டாஸ்மாக் நிர்வாகம் தொழிலாளர் நலனில் அக்கறை எடுத்துவிட்டு பின்பு நிர்வாகத்தினை சீர்செய்ய டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.

கருத்துகள் இல்லை: