வியாழன், 26 டிசம்பர், 2013

குளிரில் குதுகலிக்க



பனியை விரட்ட...
பத்து ஐடியாக்கள்!

நியாயமாக பார்த்தால், இந்தக் கட்டுரையை பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே எழுதியிருக்கவேண்டும். ஒரு காரியத்தை செய்யாமல் விடுகிறதை  காட்டிலும், தாமதமாகவேனும் செய்து முடிப்பது நல்லது என்ற முன்னோர் வாக்கியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, குளிர் துவங்கி இரு வாரகாலத் துக்குப் பிறகு, இந்த குளிர்கால ஸ்பெஷல் கட்டுரை ரிலீஸ் ஆகிறது.

‘உஷ்... அப்பாடா! வெயில் கொடுமை கண்ணைக் கட்டுதே...’ என்று வியர்த்து விறுவிறுக்கிற வேலூர், விருதுநகர் ஏரியாக்கள் கூட, டிசம்பர் பிறந்ததும், வித் தியாசமான வேறு ஒரு மேக்கப் போட்டுக் கொள்ளும். காலை எட்டு மணிக்குக் கூட, விட்டு விலகாத பனி, மாலை ஐந்து ஆனாலே... வெடவெடக்கச்  செய்கிற ‘கூதல் காற்று’, அப்புறம் பிரிட்ஜை திறந்ததும் அடிக்கிறது போல இரவு முழுக்கவே நடுக்குகிற குளிர். போஸ்ட் மார்ட்டம் அறைகளில் போர்த்தி  வைத்திருக்கிற பிணங்கள் போல, தலை முதல் கால் வரை ஒட்டுமொத்தமும் இழுத்துப் போர்த்திக் கிடக்கிற மனித உடல்களை டிசம்பர் குளிர் நமக்கு  அறிமுகம் செய்யும்.

நாமெல்லாம், வெயில் தேசத்து மனிதர்கள். வருடத்தின் கடைசி நாட்களில் வந்து போகிற இந்த ‘வெடவெட’ குளிர் நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாதது.  இதை சமாளிக்க, இந்த மாதங்களில் மருந்து கடைகளிலும், ‘‘மருந்து’’ கடைகளிலும் (புரிகிறவர்கள் புரிந்து கொள்ளுங்கள்; புரியாதவர்கள் டாஸ்மாக் எடிட் டரை தனியாக அணுகி கேட்டுக் கொள்ளுங்கள்) மக்கள் கூட்டம் அலைமோதுகிறதை கவனித்திருக்கலாம். சரி. இந்தக் குளிரை எப்படி எதிர்கொள்வது? சிலுசிலுவென பனி அடிக்கையில், சூடாக குடிப்பது சுகமான அனுபவம்.


வழக்கமாக, முத்தம் துவங்கி வாழ்க்கையின் மொத்தமும் மேற்கத்திய பழக்கங்களை காப்பியடிப்பது நமக்கு வழக்கம். ஜில்லுனு குளிருக்கு சுள்ளுனு குடிக்கிற  விஷயத்துக்கும் மேற்கத்திய ஐடியாக்கள் கைகொடுக்கலாம் என மண்டைக்குள் தோன்றிய எண்ணமே இந்தக் கட்டுரைக்கான துவக்கப்புள்ளி. குளிர்காலத் துக்கு உகந்த பத்து விசேஷ பானங்களை இந்தக் கட்டுரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. அதிகம் அலையவேண்டாம். இருக்கிற சமாச்சாரங்களைக்  கொண்டு உங்கள் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளமுடியும் என்பது கீழ்க்கண்ட பானங்களின் சிறப்பம்சம்... //

1) ஹாட் சாக்லெட்:

குளிருக்கு உகந்த பானம் என்றதும், வெள்ளைத்தோல் வெளிநாட்டவர்கள் விரும்பி தேர்வு செய்வது இந்த ஹாட் சாக்லெட்டைத்தான். வீட்டுத் தோட்டத்தில்,  விறகுகளை எரிய வைத்து, குளிருக்கு கணகணப்பாக அதைச் சுற்றி நண்பர்கள், மனதுக்கு பிடித்தவர்களோடு அமர்ந்து பேசியவாறு, ஒரு கப்பில் சுடச்சுட  ஹாட் சாக்லெட் அருந்துவது அவர்களுக்கு விருப்பமான விஷயம்.

 வெறும் சாக்லெட் பானமாக அருந்துவதைக் காட்டிலும் அதன் மேற்பரப்பில் கொஞ்சம்  லவங்கம், ஏலம், கிராம்பு, உலர் திராட்சை, ஆரஞ்ச் போன்றவற்றை மிதக்க விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்தால்... அடடா! பாதிக்குப் பாதி  தண்ணீர் கலந்த பாலை ஒதுக்கி விட்டு, படு சுத்தமான கட்டிப் பாலில், சாக்லெட் எசன்ஸ் கலந்து, மேற்சொன்ன மேட்டர்களையும் உபரியாக உள்ளே தள்ளி  அருந்துவது ஆனந்தம். கொஞ்சம் ‘கிக்’ எதிர்பார்ப்பவர்கள், உள்ளே கொஞ்சம் ரம் கலந்து கொள்வார்களாம். ஆனால், அதெல்லாம் நம்ம கண்டிஷனுக்கு  அதெல்லாம் அப்ளை ஆகாது!

2) கதகதப்பு கள்:

பனை மரத்தில் பானை கட்டி வைத்து, ஏறி இறக்கும் போது உள்ளே கொஞ்சம் போதை மாத்திரைகளும் கலந்து, செத்து மிதக்கிற கரப்பான், பல்லி  வகையறாக்களை வெளியே வீசி விட்டு, வடிகட்டியால் இறுத்து ஒரு செம்பு, இரண்டு செம்பு மொச்சைப் பயறு, சுண்டல் சேர்த்து குடிக்கிற ஒரு பானமாக  நமக்கு கள் அறிமுகம் ஆகியிருக்கும். 

ஆனால், இங்கு நாம் பார்க்கிற கதகதப்பு கள் (ஹாட் டோடி) வேறு வகை. கொஞ்சம் விஸ்கி, சுத்தமான தண்ணீர், எ லுமிச்சை சாறு, சர்க்கரை... அப்புறம் முதலில் பார்த்த ஏலம், இஞ்சி வகையறாக்களை சரி சமவிகித அளவில் கலந்து கொண்டு, அதை ஒரு வாயகன்ற பாத் திரத்தில் லேசாக சூடு படுத்தவேண்டும். ஆவி பறந்ததும், அப்படியே கீழே இறக்கி, கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, ஊதி ஊதி குடித்தால்... மக்கா, குளிரு டன் நேருக்கு நேராய் மல்லுக்கு நிற்கலாம்!





3) மசாலா சாயா:

அப்பாடி... இது நம்ம ஐட்டம். விஸ்கியை காய்ச்சுவது, ரம்மை கலப்பது போன்ற ‘கில்மா’ விவகாரங்கள் இதில் இல்லை. இதை தயாரிப்பது எல்கேஜி  சமாச்சாரம். என்றாலும், இதெல்லாம் சன் டிவி சமையல் குறிப்பில் கற்றுத் தரமாட்டார்கள் என்பதால், இங்கு விளக்குகிறோம். சுத்தமாக தண்ணீரை (காஸ்  சிலிண்டர் விற்கிற விலைக்கு... ரொம்ப வீணாக்காமல்) கொதிக்க வைக்கவேண்டும். அதில், கொஞ்சம் இஞ்சி, குறுமிளகு பொடி, லவங்கப் பட்டைகள், ஏலம்,  ஓரிரு துளிகள் வெண்ணிலா எசன்ஸ் கலந்து மிதமாக சூடு படுத்தவேண்டும். கொதித்ததும் கீழே இறக்கி கொஞ்சநேரம் பாத்திரத்தை மூடி வைத்திப்பது  முக்கியம். அப்புறம், தேவையான அளவுக்கு பால், சர்க்கரை கலந்து கண்ணாடி டம்ளரில் நுரை பொங்கப் பொங்க ஊற்றி கொடுத்துப் பாருங்கள்... குடித்துப்  பாருங்கள்... குளிராவது, புண்ணாக்காவது என்று நெஞ்சை நிமிர்த்தலாம்!

4) பால்... ஆனால், பால் அல்ல:

‘பாலை குடி... பாலை குடி... என்று பாடாய் படுத்துகிறார்கள்’ என்று பள்ளியில் சக தோழர்களிடம் உங்கள் வீட்டு வாண்டுக்கள் புகார் செய்திருக்கும். பால்  நல்லதுதான். ஆனால், தினமும் வழக்கம்போல ஒரே மாதிரியாக காய்ச்சி, இறக்கி ஜீனி போட்டு குடித்துக் குடித்து வெறுத்தே போனவர்கள் எக்கச்சக்கம்  பேர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான மேட்டர் இது. வழக்கம் போலத்தான்.




 ஆனால், மேலே சொன்ன லவங்கம், ஏலம், இத்தியாதிகளை பாலில்  சம அளவில் கலந்து சர்க்கரை அல்லது தேன் (இனிப்புக்காக) சேர்ந்து சுட வைக்கலாம். கொதித்ததும், கீழே இறக்கி சாதிக்காயை பவுடராக்கி, அதன் தூளை  மேலே தூவி எடுத்துக் குடிக்கக் கொடுத்துப் பாருங்கள். (அப்புறம் உங்கள் வீடு தேடி, கடன் வசூல் செய்யக்கூட யாரும் வரமாட்டார்கள்!)

5) மசாலா பால்:

காலம், காலமாக குளிர்காலங்களில் மசாலா பாலில் தொண்டை நனைத்துத்தான் நம்மவர்கள் பனிகாலத்தை கடத்தியிருக்கிறார்கள். இதை செய்வது, சுடுத ண்ணீர் போடுகிற அளவுக்கு ரொம்ப சுலபம். இஞ்சி, கிராம்பு, ஏலம் போன்ற வாசனை பொருட்களுடன் கட்டாயமாக குறுமிளகுத் தூள் சேர்ப்பது  முக்கியம். ருசிக்காக முந்தரி, பிஸ்தா, பாதாம் பருப்புகளையும் அள்ளித் தெளிக்கலாம். மஞ்சள் பொடியும் கட்டாயம் போடவேண்டும். 






சுடச் சுட காய்ச்சி  இறக்கி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, குங்குமப்பூவை மேலே கொஞ்சம் மிதக்க விட்டு, அப்புறமாய் உள்ளே இறக்கிப் பாருங்கள். தொண்டை கமறல் போயே  போச்சு... போயிந்தே... இட்ஸ் கான் மாமு!











6) கலாட்டா காபி:

‘பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னா இருக்கு’ என்று சப்புக் கொட்டிக் கொண்டு குடிக்கிற கும்பகோணம் டிகிரி காபி தெரிந்திருக்கும். இதென்ன கலாட்டா  காபி? பெயரே அதன் ‘தரத்தை’ சொல்லியிருக்குமே! வழக்கமான, போராடிக்கிற காபி குடித்து, இருக்கிற எனர்ஜியையும் தொலைத்துக் கட்டியவர்களுக்கான  ஸ்பெஷல் தீர்த்தம் இது. கட்டங்காபி தயாரித்துக் கொள்ளவேண்டும். பால் பாத்திரத்தை கண்ணுக்குப் படாத இடத்தில் தூக்கி வைத்து விடுங்கள்.

 அதற்குப்  பதில், மூடியைத் திருகித் திறந்து, கொஞ்சம் பழுப்பு ரம் உள்ளே ஊற்றுங்கள். கொதித்து, ஆவி பறந்ததும் இறக்கி, சாக்லெட் அல்லது வெண்ணிலா கிரீமை  மேல மிதக்க விட்டு, ஒரு ‘சிப்’ சாப்பிட்டுப் பாருங்கள். காபியும், ரம்மும் சேர்ந்து அமைத்திருக்கிற கூட்டணி இருக்கிறதே... அடடா! உண்மையான  முற்போக்கு கூட்டணி இதுதான் என்று சபாஷ் போடுவீர்கள்.






7) ஹாட் ஆப்பிள் ஜூஸ்:


வைட்டமின் ‘சி’ எக்கச்சக்கமாய் இருக்கிற ஐட்டம் என்று ஆப்பிளை சுட்டிக் காட்டுவார்கள். அது உண்மையும் கூட. வெப்ப காலங்களில் ஜூஸ் போட்டு  குடிக்கலாம். குளுகுளு குளிர் காலத்தில்...? இருக்கிறது ஐடியா. 




இஞ்சி, ஏலம், கிராம்பு தோழர்களை கூட்டணிக்குச் சேர்த்துக் கொண்டு ஆப்பிள் ஜூஸை  லேசாக கொதிக்க வைத்து குடித்துப் பாருங்கள். சூப்பரோ சூப்பர்.










8) ஓஹோ ஓய்ன்:

காபி, டீ, மசாலா பால்....னு டார்ச்சர் தாங்கலையே! டாஸ்மாக் செய்திகள்ல, இதென்ன கலாட்டா என்று கொதித்து, கொடி பிடிக்கக் காத்திருக்கும் கு டிமகன்களுக்கான மேட்டர் வந்து விட்டது. அமைதி... அமைதி! ‘காபி, டீ மாதிரியும் இருக்கோணும்; உடம்புல கிக்கும் ஏறோணும்...’ என்று அருள் வந்து  ஆடுகிற பார்ட்டிகளே... கவனிக்க. பெயர்தான் ஒய்ன் ஷாப். ஆனால், ஒய்ன் தவிர மற்றதுதான் அங்கு அதிகம் விற்கும். 

அதாங்க, நம்ம டாஸ்மாக் கடைக்கு  போய், ரெட் ஒய்ன் பாட்டில் ஒன்று கேட்டு வாங்குங்க. அதையும், தண்ணீரையும் கலந்து, சில சிட்டிகை வாசனைப் பொருட்களை கலந்து, இனிப்பும்  சேர்ந்து, லேசாக சுட வைத்து இறக்கி, ‘உனக்கு... எனக்கு’ என்று போட்டி போட்டு வாங்கிக் குடிப்பது மேல்நாட்டுக்காரர்கள் வழக்கம்.






9) முட்டைப்பால்:

அமலா பால் போல, முட்டைப்பாலும், ஆளைக் கிறக்குகிற அமர்க்களமான காக்டெய்ல் பானம். ஓரிரு முட்டைகள் உடைத்து ஊற்றி, நன்றாக அடித்துக்  கலக்கிக் கொள்ளவேண்டியது முதல்வேலை. அப்புறம், கொஞ்சம் பால், கொஞ்சம் கிரீம். வாங்கி தயாராக பிரிட்ஜில் வைத்திருக்கிற வோட்கா, விஸ்கி, பிரா ந்தி, ரம்... இவற்றை தனித்தனியாகவோ, மொத்தமாகவே எடுத்து உள்ளே ஊற்றி, ஒரு கலக்க்கக்கு கலக்கி மேலே கொஞ்சம் வெணிலா எசன்ஸ் மிதக்க விட்டு  சாப்பிட்டால், இங்கிருக்கிற பனி அல்ல... இமாலயப் பனி வந்தால் கூட, சாமி சரணம் சொல்லி சரண்டர் ஆகி விடும்.
















10) சாக்லெட் சரக்கு:

டாப் -10 பட்டியலில் கடைசி. ஆனால், சாப்பிட்டுப் பார்த்தால்... நம்பர் ஒன், நம்பர் ஒன்... சாக்லெட் சரக்குதான் நம்பர் ஒன் என்று உள்ளம் பாட்டுப்  படிக்கும். சாக்லெட் பானத்தில், சுத்தமான வோட்காவை மிக்சிங் போட்டு, மேலே கொஞ்சம் கிரீம் மிதக்க வைத்து... சிப், சிப்பாக இழுத்தால்... எம்புட்டுக்  குளிரையும் தாங்கி நிக்கலாம் காம்ரெட்!

















- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை: