வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

மதுவிலக்கு சாத்தியமா?



மதுவிலக்கு சாத்தியமா?


இன்று தமிழகத்தில் மதுவிற்கு எதிராக,மதுவிலக்கினை உடன் கொண்டுவரவும் ஒரு சில கட்சிகள் கையெழுத்து இயக்கத்தினை ஆரம்பித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் பல பிரபல பத்திரிக்கைகள் மதுவிலக்கு குறித்து அரசு சிந்திப்பதாக கூறிவரும் நிலையில் மதுவிலக்கு சாத்தியமா? என்ற இக்கட்டுரை நம்மிடையே உள்ள ஐயங்களுக்கு பதிலாக அமையும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

மது மனிதகுலத்திற்கு முற்றிலும் தேவையற்றது என்று மதுவை எதிர்பவர்கள் கூறினாலும் மனித மனம் போதைபொருட்களின் மீது ஆவல் கொண்டவையாகவே அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தினை சேர்ந்த பெரும்பான்மையினர் பலவழிகளில் போதை பொருட்களை நுகரக்கூடியவர்களாகவே இருக்கின்றனர் என்பது கவலை தரக்கூடிய செய்தியாக இருந்தாலும் உண்மை இதுவே.



சமீபத்தில் மதுரையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் ஒயிட்னர் என்ற பேப்பர்களில் தவறுகளை அளிக்கக்கூடிய ஒரு வகை புட்டியை காவல்துறையினர் விற்பனைக்கு தடைவிதித்துள்ளனர்.ஏனெனில் பள்ளிமாணவர்கள் இந்த ஒயிட்னரிலிருந்து வரும் வாசனையிலிருந்து போதையாகி இதற்கு பலர் இன்று அடிமையாகியும் விட்டனர்.இந்த ஒயிட்னர் போதை இளம்சிறார்களை கவர்ந்தது இயற்கையாகவே அவர்களது எண்ணச்சிதறல்களால் ஏற்படுகின்றது.குடும்பத்தினர் கவனத்துடன் இருந்து அவர்களை கண்காணித்து திருத்தவேண்டுமேயன்றி ஒயிட்னர் விற்பனையை தடைசெய்தால் மற்றொரு போதைவஸ்துவை நாடுகின்ற நிலை ஏற்படும்.ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி மதுவிற்பனையின் பொழுதே 21.08.12 அன்றைய ஒருநாள் செய்தி மதுரையில் 2கோடி மதிப்பினாலான ஹெராயின் பறிமுதல் மற்றும் சென்னையில் 350 கிலோ கஞ்சா பறிமுதல். இவை இரண்டும் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இருந்த பொழுதும் இப்பொழுதே இந்த அளவு நடமாடுகின்றது என்றால் மதுவிலக்கு ஏற்படும்பட்சத்தில் இதன் ஆதிக்கம் அதிகரிக்கவே செய்யும் மற்றும் தடைசெய்யப்படாத குட்கா பான்பராக்,சிகரெட் போன்றவைகளை கொண்டு போதை பெறுபவர்களும் உள்ளனர்.மதுவை தடை செய்யும் பொழுது இவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் மட்டும் பாதிக்கப்படாமல் தமிழகத்தின் சுற்றுச்சூழல்களை பாதிக்கச்செய்து அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.நவநாகரீக உலகில் தமிழகத்தில் மட்டும் போதைவஸ்துகளை முழுவதுமாக ஒழிக்கின்றோம் என முயற்சிசெய்தால் தமிழகம் சுற்றுலா மற்றும் பலதுறைகளில் வளர்ச்சி பாதிக்கும். தமிழகத்தை பொருத்தமட்டில் கிராமங்களில் நடைபெறும் சமயவழிபாடுகளில் மது முக்கிய இடம்பிடிக்கின்றது என்பதனையும் நினைவில்கொள்ள வேண்டும்

தோல்வியே வரலாறு.


சரி மதுவிற்கு வருவோம்.மதுவை ஒரு மாநிலம் தடைசெய்வதால் அந்த மாநிலத்தின் போதை விரும்பிகள் எப்படியும் அதை அடைய துடிப்பர்.இல்லையென்றால் வேறுவகையில் மதுவிற்கு மாற்றாக கண்டுபிடித்து பயன்படுத்துவர்.சென்ற காலங்களில் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவந்து பல முறை தோல்வியே கண்டுள்ளது.பல முதல்வர்கள் முதலில் மதுவிலக்கினை ஆதரித்தும் பின்பு மதுவினை வேறுவழியின்றி கொண்டுவந்துள்ளனர்.மறைந்த முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் விகடனில் மது எதிர்ப்புக்கட்டுரை படைத்தார்.உண்மையில் தமிழகத்தில் மதுவின் வாசனைக்கூட நெருங்கக்கூடாது என்று விரும்பினார்.அதனால் தமிழகத்தில் மதுவிலக்கு அறிவித்தார். ஆனால் கள்ளசாராயத்தினை ஒழிக்க முடியாமல் கள்ள சாராயம் காய்ச்சுபவர்களை நாடுகடத்துவேன் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.ஆனாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நிறுத்தமுடியாமல் பின்பு மதுவிற்பனையை மனவெறுப்புடன் மீண்டும் தமிழகத்தில் ஆரம்பித்தார்.எனவே திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் முடியாத காரியத்தினை இனியாரும் முடிப்பார்கள் என்று எண்ணுவது மதுஎதிர்ப்பார்களின் அறியாமையே.அப்படியே தேர்தலுக்காக அறிவித்தாலும் பின்பு சாத்தியமில்லை என கூறி தனியாரிடம் மதுவிற்பனையை வழங்கி அரசின் வருமானத்தினை இழக்கச்செய்வர். அமெரிக்காவிலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் முதலில் மதுவிலக்கு கொண்டுவந்து தோல்விக்கு பின்பு மீண்டும் மதுவிற்பனையை நடத்திவருகின்றனர்.

குஜராத் முன் உதாரணமா?

இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களிலேயே குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு என்று பெயரளவில் அறிவித்துவிட்டு மாநிலத்தின் சிலபகுதிகளை பொருளாதார சிறப்புமண்டலங்கள் எனக்கூறி அங்கு மட்டும் மதுவிலக்கினை தளர்த்தியுள்ளனர்.இது குஜராத்தும் மதுவிலக்கினை ரத்து செய்வதற்கான முன்முயற்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி அவர்களை போன்று மதுவிலக்கு என அறிவித்துவிட்டு பின்பு தமிழகத்தில் பொருளாதார சிறப்புமண்டலங்கள் என சிலபகுதிகளில் மட்டும் மதுவிற்பனைசெய்தால் மதுபிரியர்கள் அந்த பகுதிகளை நோக்கி படையெடுக்கவே செய்வர்.சென்ற காலங்களில் தமிழகத்தில் மதுவிலக்கினை அமுல் செய்தபொழுது பலர் பக்கத்து மாநிலங்களை நோக்கிச்சென்ற கதையை யாரும் மறந்து இருக்கமாட்டோம்.தற்பொழுதும் கூட நம்மைவிட சிறிது விலைகுறைவு என்பதற்காக பாண்டிச்சேரி சென்று மது அருத்துபவர்கள் பலர் தமிழகத்தில் இருப்பதை மறந்துவிடக்கூடாது. எனவே குஜராத்தை நமக்கான மதுவிலக்கு முன்மாதிரியாக கொள்ள வேண்டிய அவசியமில்லை.

முதலில் மது எதிர்ப்பு பிரச்சாரர்கள் மதுவிற்பனையின் அதிகரிப்பின் அளவினை கருத்தில் கொண்டு மதுவிலக்கினை வேண்டுகின்றனர்.அரசு மதுவிற்பனையை கையில் எடுத்தப்பின்பே மதுவிற்பனை அதிகரித்துள்ளது.மீண்டும் தனியார் மதுவிற்பனை செய்யும்பட்சத்தில் கண்டிப்பாக மதுவிற்பனை குறையும்.அந்த மர்மம் அனைவரும் அறிந்ததே.பாதிக்கும் மேல் போலிமதுவிற்பனை செய்வர். மதுகடை நடத்தியவரும் நடத்த இருப்பவரும் பெரும் செல்வந்தராவது இந்த வகையிலேயே.எனவே தமிழகத்தில் மதுவிலக்கு என்பது நடைமுறை சாத்தியமற்றதாகும்.

டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

எந்த டாஸ்மாக் ஊழியரும் கண்டிப்பாக மதுவிற்பனை செய்துதான் தீரவேண்டும் என்றோ மதுவிலக்கினை கொண்டுவரக்கூடாது என்றோ கூறவில்லை மாறாக 9ஆண்டுகள் பணியாற்றியும் எவ்வித பணிபாதுகாப்பின்றியும் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் நடவடிக்கையினால் ஊழலின் உறைவிடமாக மாறி மன வெறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். மதுவிலக்கினை வலியுறுத்தும் அரசியல்வாதிகளும்,பத்திரிக்கையாளர்கள் பலரும் இதனால் பாதிக்கப்படும் 36000 டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலையை உயர்த்துவதற்கான ஆலோசனையை முதலில் கூறிவிட்டு பின்பு மதுவிலக்கினை கூறட்டும்.நடைமுறைசாத்தியமற்ற மதுவிலக்கினை டாஸ்மாக் ஊழியர்கள் ஆதரிக்க தயார். மதுவிலக்கு மக்களின் மனமாற்றங்களை கொண்டு மட்டுமே நிறைவேற்றபடவேண்டும்.மதுவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யவேண்டிய அரசு சென்ற ஆண்டுவிற்பனையை விட கூடுதல்விற்பனை இல்லாத டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும்  டாஸ்மாக்தளம் வேண்டுகிறது.மதுவிற்கு எதிரான பிரச்சாரங்களுக்கு பெயரளவில் பணம் ஒதிக்கி அதை அரசியல்வாதிகள் தங்களுக்குள் பிரித்துகொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு உண்மையான பிரச்சாரத்தையும்,டாஸ்மாக் பணி நேரத்தை 8மணிநேரமாக்கவும் டாஸ்மாக்தளம் வேண்டுகிறது.

கண்டிப்பாக விமர்சன எதிர்ப்பார்ப்புடன்,
.ஷாஜஹான்,99425 22470.
திருமங்கலம்.மதுரை.

கருத்துகள் இல்லை: