புதன், 10 அக்டோபர், 2012

நன்றி தினமலர்

நன்றி தினமலர்
டாஸ்மாக் ஊழியர்களின் பரிதாப நிலை... கண்டு கொள்ளுமா தமிழக அரசு...
தமிழகம் எங்கும் சுமார் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் சுமார் 28 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஒரு டாஸ்மாக் கடையில் இரு விற்பனையாளர்களும், ஒரு சூபர்வைசரும் உள்ளனர். சூபர்வைசர் டிகிரி படித்திருக்க வேண்டும். விற்பனையாளருக்கு 10ம் வகுப்பு கல்வி தகுதியே போதுமானதாகும்.

கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட டாஸ்மாக்கில் சூபர்வைசர்களுக்கு மாதம் ஒன்றுக்கு சம்பளம் ரூ.5 ஆயிரம் எனவும், விற்பனையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்திருந்தது. இந்த சம்பளத்தில் பி.எப்., இஎஸ்ஐ பிடித்தம் போக சூபர்வைசருக்கு சுமார் ரூ.4200ம், விற்பனையாளருக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் தான் கையில் கிடைக்குமாம்.


மேலும் சூபர்வைசர் 50 ஆயிரம் ரூபாயும், விற்பனையாளர்கள் 15 ஆயிரம் ரூபாயும் டெபாசிட்டும் கட்டியிருக்க வேண்டும். காலை 10 மணிக்கு கடை திறந்தால் இரவு 10 மணி வரை கடையில் இருக்க வேண்டும். தொடர்ந்து 12 மணிநேரம் வேலை பார்க்கும் விற்பனையாளர்களுக்கு சராசரியாக ரூ.150 கூட கிடைப்பதில்லை. சரி வேறு வேலை பார்க்கலாம் என்றால் அதற்கும் செல்ல முடியாது. காரணம் காலை 10 மணிக்கு வேலைக்கு வருபவர்கள் இரவு 10 மணிக்கு மேல்தான் வெளியே செல்ல முடியும்.

பணி நேரத்தில் ஏதாவது அசம்பாவிதமோ அல்லது தவறோ நடந்துவிட்டால் உடனடியாக சஸ்பெண்ட் தான். சரக்கின் விலைகள் அரசு ஆட்சிக்கு வந்தபின் இருமுறை கூடியுள்ளது. ஆனால் டாஸ்மாக் பணியாளர்களின் நிலையை அரசு கண்டு கொள்ளவேயில்லை. இதனை எடுத்து சொல்வதற்கு எந்த அதிகாரிகளும் தயாராக இல்லை. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் கல்வி, விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்னைகளை பார்க்கும்போது சம்பள உயர்வே இல்லாத நிலையில் டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்கள் பல திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன.

அரசுக்கு அதிக வருமானம் தரும் டாஸ்மாக்கில் வேலை பார்ப்பவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கூட விடுமுறை கிடையாது. வாரத்தில் 7 நாட்களும் தினமும் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய அவலநிலையுடன் மட்டுமல்லாமல் வரும் "குடி'மகன்களின் தேவையற்ற பேச்சுக்களையும், தகராறுகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சரக்கை எடுத்து கொடுப்பவர்களுக்கு சங்கடங்கள் அதிகமாக உள்ள நிலையில் சம்பளம் மட்டும் குறைவாக இருப்பதால் பலமுறை போராடியும் பலனில்லை.

சம்பளம் பற்றாக்குறை, 12 மணிநேர உழைப்பு, வார விடுமுறையின்மை, உயர் அதிகாரிகளின் தேவையற்ற பிரச்னைகள் இவற்றால் கடந்த 2003ல் பணிக்கு சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்களில் பலர் வேலையை விட்டே போயுள்ளனர். மேலும் சம்பளம் பற்றாக்குறை காரணமாக ஊழியர்கள் தவறு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வேலையை விட்டு செல்லும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

வேறுவழியில்லாத சூழ்நிலையில் கஷ்டப்படுபவர்கள் மட்டுமே அனைத்து கஷ்டங்களையும் தாங்கி கொண்டு டாஸ்மாக்கில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வை வளமாக்குவேன் என்று வாக்குறுதி கூறிய அரசு இவர்களின் வாழ்வில் மட்டும் ஒளியேற்றாத நிலை புரியவில்லை. இவர்களுக்காக பரிந்துரை செய்யவும் ஆள் இல்லை. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு வகையிலாவது நன்மை செய்திட வேண்டுமென பணியாளர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களின் நிலையை கருத்தில் கொள்ளுமா...
நன்றி தினமலர்

நமது உரை
தினமலர் பலமுறை டாஸ்மாக் ஊழியர்களின் தவறுகளையே தேடி பிடித்து எழுதிவந்தாலும் சிலநேரங்களில் மட்டும் டாஸ்மாக் ஊழியர்களின் உண்மைநிலையினை வெளியிடுகின்றது. அரசும் டாஸ்மாக்நிறுவனமும் கஷ்டபடும் டாஸ்மாக் ஊழியர்களின் நிலைகண்டு எப்போழுது தான் தங்கள்நிலையை மாற்றி ஊழியர்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்துவார்களோ?

கருத்துகள் இல்லை: