வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

‘அளவு’க்கு மிஞ்சினால் ஆபத்தா?


‘அளவு’க்கு மிஞ்சினால் ஆபத்தா?
திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், பெண்களும் குடும்ப / அரசியல் கதைகள் பேசிக் கொண்டே ‘வாக்கிங்’ செல்வது, அன்றாடம் நாம் காணுகிற காட்சி. வயது வித்தியாசம் இங்கு பார்க்க முடியாது. கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கிற மாணவரையும் பார்க்கலாம்; கல்லூரியில் பணி செய்து ஓய்வு பெற்றிருக்கும் ‘ரிட்டையர்ட்’டுகளையும் பார்க்கலாம். வயது, உருவம் வித்தியாசப்பட்டாலும், இவர்கள் அனைவருக்குமான நோக்கம் ஒன்றே.
அது..., உடல் எடை குறைத்தல்.

உடல் எடையைக் குறைக்காவிட்டால், உயிர் வாழும் காலம் குறைந்து விடும் என்ற கருத்து, பொதுக்கருத்தாக மாறி விட்டபடியால், அனைவருமே அதற்கான பயிற்சியில் இறங்கி விட்டனர். பெரும்பாலானோர் சாலையோர வாக்கிங், சிலர் வீட்டுக்குள்ளேயே கருவிகள் வாங்கிப் போட்டு, வியர்வை சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அதிகாலை நேரங்களில் வியர்க்க, விறுவிறுக்க நடப்பதெல்லாம் நன்மைக்கே. பாராட்டலாம். அன்றைய நாள் பொழுது ஓடியடைந்து, இரவும் பகலுக்கு உரசிக் கொள்ளும் அந்திப் பொழுது வேளையில், ஆல்கஹால் புழங்கும் மதுக்கடை பார்களில் சரணாகதி அடையும் போதுதான் ஆரம்பிக்கிறது வினை.

உடல் எடை குறைக்கிற பணியில் கண்ணும், கருத்துமாக இருக்கும் ‘குடிமகன்’கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அடிப்படையாக ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருப்பது நலம். உடல் எடை குறைப்பு வேலையும் ‘உ.பா’ மேட்டரும் ஒன்றுக்கொன்று கீரியும், பாம்பும் போல. ஆனாலும், இரண்டையும் ஒரே நேரத்தில் ‘டீல்’ செய்வது எப்படி என, டாஸ்மாக் ஏரியாவில் டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு அறிவுத்திறன் அமையப்பெற்ற நிபுணர்கள் அட்வைஸ் தருகிறார்கள். அவர்கள் தரும் ஆறு கட்டளைகள் இங்கே...

நாளை முதல் குடிக்கமாட்டேன்: உடல் எடை குறைப்பு மட்டுமே உங்களது மிக முக்கிய, மிக அவசர தேவை என்றால், தயவு செய்து டாஸ்மாக் இருக்கிற தெருவைக் கூட தவிர்த்து விடுங்கள். ‘இன்று ஒரே ஒரு நாள் மட்டும்தான். நாளை முதல் குடிக்க மாட்டேன்... சத்தியமடி தங்கம்!’ என்றெல்லாம், சத்தியத்தை வீணாக்காதீர்கள். இப்படி சத்தியம் செய்தவர்கள் ஜெயித்ததாக, சரித்திரத்தில் தகவல் இல்லை.

நாக்கை நனைக்கலாமா? ‘அது’ இல்லாமல் ஆகாது என்கிற ‘கேஸ்’கள்... வாரத்திற்கு ஒரு முறை, உறவினர்கள் அல்லது நண்பர்களின் சந்திப்பு என மாதத்தில் ஏதாவது ஓரிரு நாட்கள் மட்டும் நாக்கை நனைக்கலாம். ஆனால், அளவோடு. உள்ளே இறங்கிய சரக்கு, தொண்டையைக் கடப்பதற்குள், பாட்டிலை மூடி வைத்து விட்டு நடையைக் கட்டி விடவேண்டும்.

அளவானாலும் ஆபத்து: தினமும் குடிக்கிற வேலை... ஆகவே ஆகாது. ‘‘தினமும் அளவோடு குடித்தால், ஹார்ட் அட்டாக் வரவே வராது என்று புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள்,’’ என்றெல்லாம் காரணம் தேடாதீர்கள். அந்தத் தகவல் உண்மையோ, பொய்யோ... ஆனால், தினமும் குடித்தால்... அது அளவாகவே இருந்தாலும், டேஞ்சர்தான். காரணம், தினமும் செய்கிற வேலைகள், நமது இயல்பாகவே மாறி விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. தினமும் பழகி விட்டால், ஒரு கட்டத்தில் உங்கள் மனது அதற்கு அடிமையாகவே மாறி விடும். தவிர, ஒரு மாதத்துக்குப் பிறகு, அளவு கட்டாயம் ஓரிரு ரவுண்டு அதிகமாகும். மருந்தாக நினைத்துக் குடிக்கிறேன் என்று இறங்கி, கடைசியில் அதை மறக்கமுடியாத அளவுக்கு அடிமையாகிப் போகிற ஆபத்து நேரிடலாம்.

கலோரி கணக்கு தெரியுமா? நீங்கள் குடிப்பது பிராந்தியோ, விஸ்கியோ அல்லது பீர், ஓயினாக... எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில், எத்தனை ‘கலோரி’களை உள்ளே இறக்கப் போகிறீர்கள் என உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் எடை குறைப்புக்கான ‘கலோரி’ பட்டியலில் சரக்கு ஆக்கிரமித்துக் கொள்ளும் சதவீதம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அளவை மெயின்டெய்ன் பண்ணத் தெரிந்திருப்பது முக்கியம்.

கோழி... காலி! உற்சாகபானம் ஒரு பக்கம் ஆபத்து என்றால், அதனுடன் சேர்த்து ‘சைட் டிஷ்’ என்கிற பெயரில் உள்ளே இறங்கும் கோழி, முட்டை, வறுவல், பொரியல் சமாச்சாரங்கள் படு, படு ஆபத்து. சரக்கு சாப்பிடும் போது அல்லது சாப்பிட்டப் பின், நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகும் உணவு விஷயத்தில் மிகக் கவனமாக இருங்கள். உணவு முக்கியம். அதேசமயம், ‘லைட்’டான உணவாக இருக்கவேண்டியது அவசியம். சிலருக்கு ‘சரக்கே’ உணவாகிப் போகும் அபாயமும் நடக்கும். அதுவும் ஆபத்து.

புலம்பலுக்கு தடா: செய்கிற செயல் குறித்த குற்ற உணர்ச்சி வேண்டாம். உடல் எடை குறைக்கிற முயற்சியில் இருக்கும் போது, குடி தவறுதான். ஆனாலும், ஆசைக்கு ஒரு முறை குடித்து விட்டப் பிறகு... ‘அடடா... தப்புப் பண்ணீட்டமே...! இப்படி நடந்து போச்சே’ என்று புலம்பிக் கொண்டிருப்பது, குடிப்பதை விடவும் ஆபத்து. சரி. ஒரு தடவை நடந்து விட்டது என்றால், விஷயத்தை லேசாக எடுத்துக் கொண்டு, அடுத்த முறை உஷாராக இருங்கள். அவ்வளவுதான்.

                                       மூத்த பத்திரிக்கையாளர்
                                                    _ திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் _
                                            yes.krishnakumar@yahoo.in

கருத்துகள் இல்லை: