திங்கள், 30 ஏப்ரல், 2012

எட்டாகனி


மே தினம் 8மணி நேர வேலையை உறுதிசெய்ய உலகமெங்கும் ஏற்பட்டதொழிலாளர்களின் உன்னத புரட்சியின் பலனால் ஏற்பட்டது என்பதனை நாம் அறிவோம்.ஆனால் அது நமது இந்தியாவில் ஏட்டளவில் தான் உள்ளது என்பதும் நாம் அறிவோம் .ஆனால் தற்பொழுது தொழிலாளர் நலச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என பிரதமர் வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களை மனதில் வைத்துக்கொண்டு கூறிவருவது அந்த ஏட்டளவு சட்டங்களுக்கும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு இல்லையெனில் பங்கம் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை.



இந்த எட்டு மணி நேர உழைப்பு நிர்ணயம் என்பது பெரும்பாலும் படித்தவர்களுக்குத்தான் உதவுகிறது. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எனப்படும் கல்லுடைக்கும் கொத்தடிமைகள், டாஸ்மாக் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஆலை ஊழியர்கள், நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தினக் கூலிகள் என கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் ஒரு வேளை உணவுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவில் பெரும்பான்மை தொழிலாளர்களின் எட்டாகனியாக எட்டுமணிநேர வேலை அமைந்துள்ளது.

மேதின வரலாறு

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் மே தினம்

இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் .சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

தொழிலாளர் விழிப்புணர்வே மேதினசெய்தி

நம் தொழிலாளர்கள் அரசு மற்றும் நிர்வாகத்தின் நெருக்கடிக்கு பயந்து வாழக்கூடிய சூழ்நிலையிலிருந்து மீட்டு தனது பலத்தினை அறிவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தொழிலாளர் சங்க தலைவர்கள் முன்வரவேண்டும். நாம் எம் எதிரிகளால் தூக்கில் இடப்படுகின்றோம். மரணத்தின் பின்னான எம் கல்லறைகளின் மௌனம் பல கதைகள் சொல்லும் இது மேதினத் தியாகிகளின் இறுதி வார்த்தைகள்.ஆம் உங்களின் கல்லறைகளின் மௌனம் கடந்த 125-வருடங்களாக, அனைத்துலகப் பாட்டாளி வார்க்கத்திற்கும், விடுதலைக்காகவும், இழந்த உரிமைகளுக்காகவும் போராடும் மக்களுக்கும் பல கதைகளைச் சொல்லியுள்ளன. தொழிலாளர்கள் தங்களின் பலத்தை அறியாமல் இருப்பது தொழிற்சங்களின் செயல்பாட்டின்மையையே காட்டுகின்றது.பல
ஊடகங்களும் மறைமுகமாக தொழிலாளர்களுக்கு எதிராக எழுதிவருகின்றன.தொழிலாளர்களை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் மறைமுக கூட்டணி அமைத்துகொண்டு தங்கள்நிர்வாகிகளைமட்டும் காப்பதற்கான அமைப்புகளாக மாறி வருவதால் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் தோல்வியை சந்தித்துவருகின்றன.தமிழகத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் இரு திராவிட கட்சிகளும் ஆட்சியில் இல்லாத பொழுது தொழிலாளர்கள் ஆதரவு நிலையையும் ஆட்சியில் அமர்த்திவிட்டால் கட்சி சார்பற்ற தொழிலாளர்களை கட்சி தொடர்பினை ஏற்படுத்தி அவர்கள் நலனினை புறக்கணித்து வருகின்றன. எனவே இக் கட்சிகளை என்றும் எதிர்கட்சியாகவே அமர்த்த தொழிலாளர் விழிப்புணர்வினை தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தவேண்டும்.மக்கள்நலப்பணியாளர்கள்,சத்துணவு பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள்,நகராட்சி,மாநகராட்சி பணியாளர்கள் அனைத்து அரசுசார்புடைய தொழிலாளர்கள் ஒருங்கினணந்து அரசிற்கு ஏதிராக போராடி தொழிலாளர் நலச்சட்டங்களை நிறைவேற்ற பாடுபடவேண்டும்.

மே தின உழைப்பாளர்களின் போராட்டம் இன்றும் நம்மை போராட்டத்தின் பலனை நமக்கு உணர்த்துவதுடன் தொழிலாளர்கள் விழிப்புணர்வே தொழிலாளர் நலன் சார்ந்த விசயத்தில் நன்மையை ஏற்படுத்தும் என்று இந்நாளில் நாம் தொழிலாளர்களுக்கு உண்ர்த்துவோம்என்று உறுதிஏற்போம்.



.ஷாஜஹான்.திருமங்கலம்.9942522470.

கருத்துகள் இல்லை: