புதன், 19 ஜூன், 2013

கொத்தடிமைகள்


மதுபானம் விற்பது நம் சமூகத்தில் ஓர் இழிவான வேலை. ஆனாலும், அந்த வேலையில் சேர முண்டியடித்தது பட்டம் படித்த இளைஞர் கூட்டம். அரசு வேலை என்றால் சும்மாவா? ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முயன்றனர். 36 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. மேற்பார்வையாளர், விற்பனையாளர், விற்பனை உதவியாளர் என்ற பணிகள் தரப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இந்த ஆண்டிற்கான இலக்கு 25 ஆயிரம் கோடி. ‘கவர்மென்ட்டே எங்களை நம்பித்தான் இருக்கு’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டாலும், இவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் ஏராளம்.


தமிழகம் முழுவதும் சுமார் 6,900 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும் மேற்பார்வையாளர் ஒருவர், விற்பனையாளர் 4 பேர், விற்பனை உதவியாளர் ஒருவர் என மொத்தம் 6 பேர் இருக்க வேண்டும். ஆனால், இருப்பது என்னவோ ஒரு கடைக்கு ஒருவர் அல்லது இருவர் மட்டும்தான். லாரிகளில் வந்திறங்கும் சரக்குகளை சரிபார்ப்பது, அடுக்கி வைப்பது, விற்பனை செய்வது, கணக்குப் பார்ப்பது, பணத்தை ஒப்படைப்பது என அத்தனை வேலைகளையும் இவர்கள்தான் செய்கிறார்கள்.

ஆரம்பத்தில் தினமும் 16 மணி நேரம் வேலை செய்தனர். காலை 8 மணிக்குத் திறக்கும் கடையை நள்ளிரவு 12 மணிக்குத்தான் மூடுவார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை வழங்கப்படும் என்று கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டும், இன்று வரை வார விடுமுறை இல்லை. வருஷத்தில் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை. அதிகாரிகள், அரசியல்வாதிகள், குடிமகன்கள் ஆகியோரிடம் இவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

சமீபத்தில் பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. பேருந்துகளுக்கு அடுத்தபடியாக வன்முறையாளர்களின் இலக்காக இருந்தது டாஸ்மாக் கடைகள்தான். அதனால், கடையின் பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் கடையிலேயே படுத்துக் கொள்ளுங்கள் என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்டனர்.


வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசாரே திணறும்போது, நாங்கள் எம்மாத்திரம்? 50 பேர் கொண்ட கும்பல் வந்தால், அவர்களை எங்களால் தடுக்க முடியுமா? தடுத்தால், எங்கள் நிலைமை என்னாகும்? மேலும் அழுக்கடைந்த, காற்றோட்டமே இல்லாத அந்தக் கடைக்குள் எப்படித் தூங்க முடியும்?" என்று ஆதங்கத்தோடு கேட்கிறார், கடலூரைச் சேர்ந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஒருவர்.

எம்.ஆர்.பி.யை விட கூடுதல் விலை வைத்து சரக்குகளை விற்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் மீது புகார் சொல்லப்படுவதுண்டு.

குளிர்ச்சியாக இருந்தால்தான் பீர் ருசியாக இருக்கும். ஆனால், கடையில் ஃப்ரீஸரே கிடையாது. எங்கள் சொந்தப்பணத்தில் ஃப்ரீஸர் வாங்கி வைத்துள்ளோம். அதனால், பாட்டிலுக்கு 2 ரூபாய் கூடுதலாக வைத்து விற்கிறோம். இது தவறா? கடந்த ஆண்டுதான் 2,500 கடைகளுக்கு மட்டும் ஃப்ரீஸர்களை அரசு வழங்கியது. அதிலும் பாதிக்குமேல் வேலை செய்யவில்லை. மின்கட்டணம் 100 ரூபாய் என்றால், 60 ரூபாய்தான் அரசு தருகிறது, மீதியை நாங்கள்தான் கட்டுகிறோம்" என்று புலம்புகிறார், தர்மபுரியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர்.

ஒவ்வொரு கடைக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கை எட்டாத கடைகளின் பொறுப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


விற்பனை குறைவதற்கு ஊழியர்கள் காரணமல்ல. வாடிக்கையாளர்கள் விரும்புகிற பிராண்டுகளை அதிகாரிகள் வாங்குவது இல்லை. தங்களுக்கு வேண்டப்பட்ட கம்பெனிகளின் சரக்குகளை மட்டுமே வாங்குகிறார்கள். அதுதவிர, ஒரே பகுதியில் பல கடைகளைத் திறக்கிறார்கள். எல்லை மாவட்டங்களில் வெளிமாநிலச் சரக்குகள் தாராளமாகக் கிடைக்கின்றன. இதெல்லாம்தான் விற்பனை சரிவுக்குக் காரணங்கள். ஆனால், நியாயமே இல்லாமல் தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டுகிறார், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் செயலாளர் க.திருச்செல்வன்.


மதுபாட்டில்கள் உடைவதால் ஏற்படும் இழப்பு இவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.


கியாஸ் ஏற்றப்பட்டிருப்பதால், கோடைக்காலங்களில் பீர் பாட்டில்கள் தானாக வெடிக்கின்றன. விற்பனையின்போது சில நேரங்களில் கைதவறி விழுந்து பாட்டில்கள் உடைகின்றன. லாரியில் வரும்போதே உடைந்த பாட்டில்கள் பெட்டியில் இருக்கின்றன. பெட்டியைத் திறக்கும்போதுதான் அது தெரியவருகிறது. இவ்வாறாக, ஒரு லோடுக்கு 3,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்புகளை ஈடுகட்டுவதற்கு ஊழியர்கள் பெரும் சிரமப் படுகின்றனர்" என்கிறார், திருச்செல்வன்.


வாடிக்கையாளர்கள் மூலம் வரும் பிரச்சினைகளைக் கூறுகிறார், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர். எல்லாவிதமான மோசடிப் பேர்வழிகளையும் நாங்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. பாட்டிலை வாங்கி மறைத்து வைத்துவிட்டு, ‘வாங்கவே இல்லை’ என்று சிலர் சத்தியம் செய்வார்கள். சிலர், கையில் 20 ரூபாய் வைத்துக்கொண்டு, கடையோரம் நிற்பார்கள். ‘குவாட்டர் கொடு’ என்பார்கள். ‘பணம் கொடு’ என்று நாம் கேட்டால், ‘இப்போதுதானே 100 ரூபாய் கொடுத்தேன். மீதி 20 ரூபாய் கொடுத்தாயே’ என்று கையில் வைத்திருக்கும் 20 ரூபாயைக் காட்டுவார்கள். மின்வெட்டு நேரத்தில் கள்ளநோட்டு கண்டுபிடிக்கும் கருவி வேலை செய்யாது என்பதால், அந்த நேரம் பார்த்து சிலர் கள்ளநோட்டை தருகிறார்கள். அதையும் நாங்கள்தான் கட்ட வேண்டும்" என்று பரிதாபமாகக் கூறுகிறார், மதுரையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர்.


பணம் கட்டுவதற்காகச் செல்லும்போது, சமூக விரோதிகளின் வழிப்பறித் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். சென்னையில் தனியார் வங்கியைச் சேர்ந்தவர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தை வசூலிக்கிறார்கள். அதுபோன்ற ஏற்பாட்டை மற்ற ஊர்களிலும் செய்யவேண்டும் என்பது ஊழியர்களின் கோரிக்கை.


இரவு 10 மணிக்கு கடையை மூடினாலும், பணத்தை எண்ணி கணக்கை எழுதி முடிக்க இரவு 11 மணியாகிவிடுகிறது. அந்நேரத்தில் மின்வெட்டு இருந்தால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கணக்குப் பார்க்க வேண்டியிருக்கும். அதன் பிறகு கணக்கை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குச் செல்ல இரவு 12 மணிக்கு மேலாகி விடுகிறதாம்.


பார் மூலம் வருகிற பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


பார் ஏலம் விடப்படும்போது அதுகுறித்து அதிகாரிகள் எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. பார் ஏலம் எடுத்தவர் பணம் கட்டத்தவறினால், பணத்தைக் கட்டு என்று அவரிடம் நாங்கள் சொல்ல வேண்டுமாம். அந்த நபருக்குப் பின்னால், அரசியல்வாதிகளோ ரவுடிகளோ இருக்கிறார்கள். பணம் கட்டு என்று நாங்கள் அவரிடம் சொன்னால் எங்கள் நிலைமை என்னவாகும்?" என்று கேட்கிறார், தர்மபுரியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர்.


2003-இல் டாஸ்மாக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, வேலையில் சேர்ந்த அத்தனை பேரும் இளைஞர்கள். அவர்களில் பலருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம்.


டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கிறோம் என்று சொன்னால், யாரும் பெண் தருவதில்லை. டிராவல்ஸ் வைத்திருக்கிறேன், பெட்டிக்கடை வைத்திருக்கிறேன் என்று பொய் சொல்லி சிலர் கல்யாணம் செய்தனர். உண்மை தெரிந்த பிறகு, பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்துச்சென்ற சம்பவங்களும் உண்டு. நான் காதல் திருமணம் செய்ததால் தப்பித்தேன்" என்கிறார், திருவண்ணாமலையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர்.


பணிச்சுமை, மோசமான பணிச்சூழல் போன்ற காரணங்களால் இந்த ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். டாஸ்மாக் கடையில் வேலைக்குச் சேர்ந்த பல இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இறந்தும் போயிருக்கிறார்களாம். மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள ஊழியர்களுக்கு கவுன்சலிங் அளிப்பது குறித்து தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. அதை அரசாங்கமேகூடச் செய்யலாம்.


கடந்த தி.மு.க. ஆட்சியில் 3 முறையும் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறையும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டும் இவர்களின் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? மேற்பார்வையாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், விற்பனையாளர்களுக்கு 4 ஆயிரத்து 400 ரூபாய், மதுக்கூட உதவியாளர்களுக்கு 3,300 ரூபாய்.

 

பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை, மிகை நேர ஊதியம், வார விடுமுறை, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பண்டிகை விடுமுறை நாட்கள் போன்ற நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.


முத்தாய்ப்பாக ஒரு விஷயம்... கேரள மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை. காரணம், குடிப்பழக்கம் உள்ளவர்களின் மாதச் சம்பளம் மதுக்கடைக்குப் போய்விடாமல், குடும்பத்திற்குப் போக வேண்டும் என்ற நல்லெண்ணம்தான். தமிழக அரசும் இதைப் பின்பற்றலாமே...

 

ஆ. பழனியப்பன்.

நன்றி: புதிய தலைமுறை
 

2 கருத்துகள்:

vinukumar சொன்னது…

valka unkaludaya muyarchi.
melum nalla pointkal podavum.

by kanyakumar tasmac staff

டாஸ்மாக் செய்திகள் சொன்னது…

நன்றி