திங்கள், 21 ஏப்ரல், 2014

தேர்தல் களத்தில் டாஸ்மாக்.

இன்னறய அதிபுத்திசாலி சிறு குழந்தைகள் தங்களின் காரியங்கள் நடக்க பெற்றோர்கள் முன் சிறிது நேரம் சமத்தாக நடந்து (நடித்து) தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வர்.அலுவலகங்களில் அடுத்தநாள் விடுப்பு தேவை என்றால் ஓடிஓடி வேலை செய்தும்,  அதிகாரியை காக்காபிடித்து நடித்து பின்பு விடுப்பு கேட்பது வழமை. மனிதன் இயல்பு சிலநேரங்களில் தங்கள் காரியம் நடக்க நடிப்பர் ஆனால் அரசியல்வாதிகளோ எல்லாகாலங்களில் எல்லா நேரங்களிலும் நடித்து வரும்  நிலை பாரதத்தில் தொடர்கதையாகிவிட்டது. ஆளும்கட்சி எதிர்கட்சி என அனைத்து அரசியல்கட்சிகளும் மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது போல் தொண்டர்களையும் கண்டுகொள்வது  இல்லை.தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் பிரச்சனைக்களை கையில் எடுப்பது போல் தொண்டர்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆயுதமாக அரசியல்வாதிகளின் கண்டுபிடிப்பு தான் டாஸ்மாக் மதுபானம். இந்தியாவில் 2009-ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்  30 % குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள்  என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாது பலர் கோடிஸ்வரர்கள்  இவர்கள் தேர்தல் பரப்புரைக்கு மட்டும் செலவு செய்து பயன்படுத்தும் ஆயுதம் டாஸ்மாக் மதுபானம்.


தமிழகத்தில் ஆளும் கட்சி தவிர்த்து அனைத்துகட்சியினரும் டாஸ்மாக் ஒழிப்புப்பற்றி பேசிவருகின்றனர். டாஸ்மாக் எதிர்ப்பு பற்றி பேசாத கட்சிகளே இல்லை என்ற நிலையில் தங்கள் தொண்டனுக்கு மட்டும் டாஸ்மாக் சரக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசியல்கட்சிகளுக்கிடையேயான 2014 பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வானது மாநாடுகளாக  சென்ற ஆண்டு இறுதியிலேயே துவங்கிவிட்டது.
சென்ற டிசம்பர் 26 ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான  நரேந்திர மோடி கலந்து கொண்ட பா.ஜ.க திருச்சி பேரணியை முன்னிட்டு திருச்சியில் உள்ள  226 டாஸ்மாக் மது கடைகள் மூலம் அன்று மட்டும் அரசுக்கு 46 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கப்பெற்றது.மேலும் பிப்ரவரி 8 ம் தேதி , காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  270 டாஸ்மாக் கடைகளின் ஒவ்வொரு நாளும் விற்பனை சராசரி வருவாயோடு அன்றைய விற்பனையை ஒப்பிடும்போது 1.5 கோடி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அன்று சென்னை புறநகர்பகுதியான வண்டலூரில் மோடி உரையாற்றினார். இந்த லட்சனத்தில் அக்கட்சியினர் மிகப்பெரிய நகைச்சுவையாக மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியினை பிடித்துவிட்டால் குஜராத் போல் இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கு கொண்டுவருவதாக தேர்தல் பரப்புரை செய்கின்றனர்.
அகில உலக அளவில் முற்போக்கு கட்சியாக பார்க்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சி டாஸ்மாக் பற்றி:  வடசென்னை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் டாஸ்மாக் விடுமுறைப்பற்றி ஒரு நாளிதழில் “தேர்தல் அறிவிச்சதுமே டாஸ்மாக் கடைகளை மூடிடலாம்.பலகட்சித் தொண்டர்களும் குடிச்சிட்டுத்தான்தேர்தல்பிரச்சாரத்திற்கு வர்றாங்க.இதனால் பொதுமக்கள் தான் பாவம்.. ரொம்பச் சிரமப்படுறாங்க!” என்கிறார்.
திருச்சியில் திமுக மாநாடு நடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ 10 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனையாகியுள்ளது. திருச்சி மாநாட்டுக்கு வந்த தி.மு.க வினர் கிட்டத்தட்ட 12.5 லட்சம் குவார்ட்டர் மதுவை வாங்கி அருந்தியுள்ளனர்.திமுகவின் கனிமொழி எம்.பி தேர்தல் பரப்புரையில் “தற்போதைய ஆட்சியானது ரேசன்கடைகளை புதிதாக எதுவும் திறக்காமல் டாஸ்மாக் கடைகளை பலபகுதிகளில் திறந்துஇருப்பதாக கூறுகிறார்.மேலும்  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் பற்றி மீள் ஆய்வுசெய்யப்படும் எனவும் கூறுகிறார்.
"போதையில் தள்ளாடினாலும் அ தி மு க வுக்கு வாக்களியுங்கள் !! – அதிமுகவிற்கான தேர்தல் பரப்புரையில்  நாம் தமிழர் சீமான்.

குடிமகனின் தத்துவம்:

அரசியல்வாதிகளுக்கும் மக்கள் மற்றும் தன் கட்சிதொண்டர்களுக்குமான தொடர்பு தேர்தல் அறிவிப்புகள் துவங்கியவுடன் தான் ஏற்படுகின்றது. ஆனால் உழைக்கும் தொண்டர்களுக்கும் டாஸ்மாக்கான தொடர்பு என்றும் நிலையானது.அதை புரிந்த அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றி வருகின்றனர்.

எது எவ்வாறு இருந்தபொழுதும் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களின் கஷ்டங்களை உணர்ததாக பேசுவதும் நடப்பதையும் பார்க்கும் மக்கள் எல்லா காலமும் தேர்தல்காலமாக இருந்துவிட கூடாதா என எண்ணுகின்றனர்.குடிமக்களுடன் டாஸ்மாக் ஊழியர்களும் சென்ற ஆண்டின் விற்பனை இலக்கினை இலகுவாக அடைய எல்லாபொழுதும் தேர்தல் பொழுதாக அமைய வேண்டுகின்றனர்.இருந்தபொழுதும் அடுத்த ஆண்டு இந்த காலங்களில் விற்பனை குறையும் பொழுதுஅதிகாரிகளின் நடவடிக்கை கண்டு பயந்தும் வருவது டாஸ்மாக் ஊழியர்களின் மறுப்பக்க சோகக்கதை.

கருத்துகள் இல்லை: