வியாழன், 22 ஜனவரி, 2015

சோடா பாட்டிலை மிஞ்சும் பீர் பாட்டில்


பிசாசு படத்தில் கதாநாயகன் விபத்து ஒன்றினை பார்த்து விடுவான். விபத்தின் நினைவிலிருந்து மீள முடியாமல் இருப்பான். படத்தில் மீளமுடியா துயருக்கு ஆலோசனை என்ன தெரியுமா? இரண்டு பீர் பாட்டிலை வாங்கி வயிற்றில் இறக்கு. இது வரை கூட பரவாயில்லை. குடிச்சுட்டு பாட்டிலை உடைச்சு போட்டு மனசில் உள்ள பாரத்தினை வெளியேற்று. செம ஐடியால்ல. உண்மை தான் பல குடியர்கள் சாரி குடிமகன்கள் பார் மற்றும் பல குடி இடங்களிலும் செய்து வரும் அநாகரிகம்  பாட்டில் உடைத்தல்.

இந்த பாட்டில் உடைக்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும்? சிறுவயதில் பால்புட்டியையும் தூக்கி போட்டு உடைத்து இருப்பார்களோ  இக்குடியர்கள். யூத திருமணங்களின் இறுதியில் மதுக்கிண்ணம் உடைப்பார்களாம். ஏனெனில் ஆதி ஜெருசலம் ஆலயம் உடைக்கப்பட்டதினை நினைவு கூறவும், திருமணம் என்றாலே  பிரச்சனை தான் என தெரிவிக்கவும், முதலில் உடைத்து விட்டால் இனி உடையாது பந்தம் எனவும் (ஜோசியன் இரண்டு மனைவி உனக்கு என்றவுடன் வாழை மரத்திற்கு தாலி கட்டி நம்மவர்கள் வெட்டுவது போல) ஏதோ ஒரு மூடபழக்கவழக்கமாக கண்ணாடி கிளாசினை உடைப்பர். 


அடுத்த சம்பவமாக ஒரு அரசன் , தான் ஒருமுறை பயன்படுத்திய மதுக்கோப்பையை மறுமுறை பயன்படுத்த மாட்டானாம். ஆம் குடித்தவுடன் சுவற்றில் அடித்து உடைத்து விடுவானாம். இவர்களெல்லாம் அந்த அரசனின்  பரம்பரையினராய் இருப்பாரோ? அவர்கள்  கூட கிளாசினை தான் உடைத்தனர். இவர்களோ பாட்டில்களை அல்லவா உடைக்கின்றனர். இந்த பாட்டில் உடையர்கள் தாங்கள் குடித்து இருப்பதாக காட்டி கொள்ளவே இச்செயலில் ஈடுபடுகின்றனர். அடுத்ததாக பிறரை பயமுறுத்தும் நோக்கிலும்  பாட்டிலை உடைக்கின்றனர். வீண் பந்தாவிற்கும் பலரின் கவனத்தினை ஈர்ப்பதற்க்குமாகவே பெரும்பாலும் பாட்டில் உடைப்பு நடைபெறுகின்றது. கண் மண் தெரியாத போதையிலும் பாட்டில் உடைப்பு நடக்கின்றது.

மேலே சொன்னது போல் பாட்டில் உடைப்பிறகு சினிமா தற்பொழுது பெரும் காரணமாகின்றது. எனது சிறுவயது காலத்தில் படங்களில்  சோடாபாட்டில் சண்டை ரொம்பவும்  பேமஸ். பெரும் கூட்டங்களை சிதற அடிக்கவும் கதாநாயகன் ஒருவராக பல எதிரிகளை சந்திக்கவும் எடுக்கும் ஆயுதம் சோடாபாட்டில். பல சோடா பாட்டில் சண்டைகளை நேரிலும்  பார்த்திருக்கின்றேன் . கோலி குண்டு சோடா கேஸ் நிரம்பியதாக உண்மையில் பயங்கர ஆயுதம் தான். சினிமாக்காரர்களிடம் கேட்டால் நிஜத்தில் நடப்பதினை தானே  படமாக எடுக்கின்றோம் என்பர். 

கதாநாயகனை காட்டும் பொழுதும் கற்பழிப்புகளை தடுக்கும்  போதும் கண்ணாடியினை உடைத்து கொண்டு தான் கதாநாயகன் வருவார். இதெல்லாம் நிஜத்தில் எங்கு நடக்கிறது? படத்தின் இறுதி கட்ட சண்டையில் கண்ணாடிகள் பலவகையில் உடைக்கப்படும். அந்த கால வில்லன்களுக்கு கண்ணாடி சில்களை கையாள தெரிவது அவசியமாயிருந்தது. வடிவேலிடம் ஒரு படத்தில்  பாட்டிலுக்கு சானம் பிடிக்க கூறி மிகப்பெரிய ஆயுதம் கண்ணாடி என மக்கள் மனதில் நகைச்சுவையுடனே  நிலைநிறுத்துவார். 

தற்பொழுது சாதி மத சண்டைகளுக்கும் பாட்டில் உடைப்பு தான். இருபிரிவுகளாக மோதுபவர்களும் பெட்ரோல் குண்டு என்ற பெயரில் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பற்றவைத்து எரிவது. சமீபத்தில் ஒருபாரில் பீர்பாட்டிலை தான் உட்கார்ந்து இருக்கும் டேபிளிலேயே உடைத்தான் ஒரு குடிமகன். பீர்பாட்டிலில் உள்ள கேஸ் பயங்கரமாக வெடித்தது. அவன் முகம், உடல் கைகால் எல்லாம்  பாட்டில் சிதறல்கள். அவன் மட்டுமில்லாது அருகே அமர்ந்தவர்கள் என பலரும் காயம். பாரே ரத்த காடயிற்று.

பாட்டில் உடைத்தலால் பலவகைகளில் சிக்கல் ஏற்படுகின்றன. குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் பயணிகள் கூட பெரும்பாலும் தற்பொழுது குடிக்காமல் இருப்பதில்லை. குடித்ததோடு பாட்டில் உடைக்காது இருப்பது இல்லை. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களான குற்றலாம்,கொடைக்கானல், ஊட்டி,வால்பாறை  பகுதிகளிலும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதிகளிலும் பல இடங்களில் மது பாட்டில்களின் சிதறல்கள். பல சுற்றுலா பயணிகள் இந்த கண்ணாடி சிதறல்களால் காயமடைக்கின்றர். கண்ணாடி சில்கள் ஏற்படுத்தும் காயம் லேசில் குணமடைவதில்லை. 

வன விலங்குகளும் பலவாறு காயப்படுகின்றனர். குறிப்பாக மான்கள், காட்டெருமைகள், யானைகள், ஆடு மாடு போன்ற கால்நடைகள் தங்களது கால் குளம்புகளுக்கிடையில் கண்ணாடி சில்காயங்கள் ஏற்பட்டு நடக்கமுடியாமல் மரணிக்கின்றனர். மதுரையில் புதிதாக முளைக்கும் கார் கம்பெனிகளும் தங்களது கண்ணாடி கழிவுகளை முறையாக குப்பையில் கொட்டுவதில்லை. அருகில் உள்ள கண்மாய்களிலும் ஓடைகளில் கொட்டுகின்றனர். இதிலும் பலரும் காயப்படுகின்றனர். 

அபராத சட்டங்களாலும் கடுமையான தண்டனைச் சட்டங்களாலும் இந்த பாட்டில் உடைப்பினை உடனடியாக ஒழிக்கவேண்டும். சக நண்பர்கள் பாட்டில் உடையர்களை பெரும் குற்றம் இளைதவராய் தவிர்க்க வேண்டும். இருந்த போதும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் பாட்டில் உடைப்பாளர்கள் எந்த நன்மையும் ஏற்படுத்தாத பாட்டில் உடைப்பினை நிறுத்துதல் நலம்.


கருத்துகள் இல்லை: