செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

மது மாஃபியா(தள்ளாடும் தமிழகம் 2)தமிழகத்தில் இப்போது மதுதான் மாஃபியா. அரசு, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள் சமூக விரோதிகள் இவர்கள் அனைவரும் சேர்ந்தே டாஸ்மாக்கை நடத்துகின்றனர். அரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கு சமூக விரோதிகளுக்கும் டாஸ்மாக் மூலம் பணம் கொட்டுகிறது. 2003க்கு முன்பு வரையிலும் மது விற்பனையிலிருந்து தமிழகத்திற்கு 20-30 கோடிதான் கிடைத்து வந்தது. தமிழகம் முழுவது, சுமார் 7 ஆயிரம் கடைகளைத் திறந்து சில்லறை வர்த்தகத்தில் அரசு இறங்கியதும் அதன் வருவாய் உயரத் தொடங்கியது. 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை கடந்து கூடுதலாக ஒரு பத்து ஆயிரம் கோடியாவது அரசியல்வாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் போகிறது'' என இந்தியா டுடேவிடம் தெரிவித்தார் சமூக ஆர்வலரும் தமிழகத்தின் மதுக் கொள்கை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவருமான நாராயணன். 

2003
ஆம் ஆண்டு சில்லறை வர்த்தகத்திற்குள் நுழைகிற வரை வெறும் 4 நிறுவனங்களிடமிருந்துதான் மதுவை கொள்முதல் செய்ததது தமிழக அரசு. அதுவரை அரசியல்வாதிகள் நேரடியாக இந்த வர்த்தகத்தில் இறங்கவில்லை. ராமச்சந்திர உடையாரின் நிறுவனமான மோகன் ப்ரூவரீஸ், புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான எம்.பி குழும நிறுவனம், விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் மற்றும் பழனி அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த எஸ்.வி.பாலசுப்ரமணியனின் சிவா டிஸ்டில்லரீஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் மது உற்பத்தி செய்தனஇவர்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசுக்கு நெருக்கமாக இருந்த தொழிலதிபர்கள். 2003 ஆம் ஆண்டில் நேரடி மது விற்பனையில் இறங்கியதும் 8 தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுகத் தலைவர் கருணாநிதி 10 நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க இவற்றில் பாதிக்குப் பாதி பினாமிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளியான வழக்கறிஞர் லோகநாதன் அம்பலப்படுத்துகிறார். 

டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை செய்யும் நிறுவனங்களின் பின்னணியை அறியும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களைக் கோரினேன். பாரம்பரியமாக மது கொள்முதல் செய்யப்பட்ட நான்கு நிறுவனங்களைக் கடந்து அரசுக் கொள்கையை உடைத்து 2003 ஆம் ஆண்டு கோல்டன் மிடாஸ் நிறுவனத்திற்கு அனுமதியளித்தார் ஜெயலலிதா. அது சசிகலாவின் பினாமிகளுடையது என்பது ஊரறிந்த ரகசியம்.. 2006ல் அனுமதியளிக்கப்பட்ட நிறுவனங்களில் இலைட் டிஸ்டில்லரீஸ் திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினருடையது. எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ் கலைஞரின் உளியின் ஓசை, பெண் சிங்கம் போன்ற படங்களை தயாரித்த ஜெயமுருகனுக்கு சொந்தமானது. கால்ஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ... ஸ்டாலின் பினாமி என கூறப்படுகிறது' என இந்தியா டுடேவிடம் தெரிவித்தார் லோகநாதன்.

அரசுக்கும் லாபம் அரசியல்வாதிகளுக்கும் லாபம் என்ற நிலை அப்போதுதான் உருவானது. ஆட்சி மாற்றம் வந்தால் முந்தைய ஆட்சியின் திட்டங்கள் அனைத்தையும் கலைத்துவிடக் கூடிய ஜெயலலிதாவும் கருணாநிதியும் டாஸ்மாக்கில் மட்டும் ஒற்றுமையாக செயல்படுவதை அவர் மேலும் உறுதிபடுத்துகிறார். ‘கலைஞர் ஆட்சியில் மிடாஸ் நிறுவனத்திடமும் ஐநூறு கோடிக்கும் மேல் மது கொள்முதல் நடந்தது. இந்த அதிமுக ஆட்சியில் மிடாஸ் நிறுவனத்திற்கு 1400 கோடிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் கலைஞரின் பினாமியாக அறியப்படுகிற ஜெயமுருகனின் எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ் சுமார் 1500 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல மது தொழிற்சாலைகளை நடத்தும் தொழிலதிபர்களும் கூட்டாளிகள்தான். ராமச்சந்திர உடையாரின் மோகன் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் நந்தகோபால் மிடாஸில் பங்குதாரர். அரவிந்த் நந்தகோபாலின் சாகர் ஷுகர்ஸ் நிறுவனத்தில் எஸ்.என்.ஜே ஜெயமுருகனின் மனைவி கீதா நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இப்படியாக மிக நெருக்கமாக இயங்கி இவர்கள் அனைவரும் லாபம் பார்க்கின்றனர். ஆட்சி மாறினாலும் வியாபாரத்தில் அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றனர்'' என்கிறார் லோகநாதன். 

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக 20 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்கள் அனைத்து கரும்பு சக்கையிலிருந்தும் வெல்லத்திலிருந்துமே தயாரிக்கப்படுகிற நிலையில் தமிழக அரசு மது உற்பத்தியை யும் தானே மேற்கொள்ளலாமே என வினவுகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் அப்படி நடந்தால் அரசியல்வாதிகளின் பிசினஸ் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி டாஸ்மாக் கடைகளோடு இணைந்த பார்களுக்கான அனுமதியும் பெரும்பாலும் கட்சிக்காரர்களுக்கும் சமூக விரோதிகளுக்குமே வழங்கப்பட்டிருக்கிறது. இதிலும் பெரும் ஊழல் நடப்பதை சுட்டிக் காட்டுகிறார் லோகநாதன். ‘கடந்த ஒன்பது ஆண்டுகளில் டாஸ்மாக் வருமானம் ஆறு மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு இணையாக பார்களின் மூலமாக வரவேண்டிய வருமானமும் ஆறு மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்த போது பார்களை டெண்டர் விட்ட வகையில் அரசுக்கு ரூ.200 கோடி கிடைத்தது. தற்போது வருவாய் 18 ஆயிரம் கோடி எனும் போது பார் டெண்டர் பணமாக சுமார் 1500 கோடிகளாவது அரசு கஜானாவிற்கு சேர வேண்டும். ஆனால் அந்த பணம் அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகளால் பங்கு போடப்படுகிறது'' என்கிறார் அவர். 

மதுபானத் தொழிற்சாலையை பல ஆண்டுகளாக நடத்தி வரும் தமிழக அரசியல்வாதி மது வியாபாரத்தை மிக வெளிப்படையாக நியாயப்படுத்துகிறார். ‘ இதில் அரசியல்வாதியை மட்டும் ஏன் குறை கூறுகிறீர்கள்? நாங்கள் பண்ணுவது வியாபாரம். எந்த வியாபாரத்திலும் லாபம்தான் முக்கியமான குறிக்கோளாக இருக்க முடியும். குடித்து மக்கள் குடல் அறுந்து சாகிறார்கள் என்றால் அது உண்மை தான். பூரண மதுவிலக்கை அமல்படுத்தட்டும் அரசு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்த நிலைமை. இந்தியாவில் பல மாநிலங்களிலும் பல அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தார் பெயரிலோ பினாமிகள் பெயரிலோ மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இன்றைய சூழலில் அரசியலில் ஈடுபட பெரும்பணம் தேவைப்படுகிறது. அதற்கு இந்த தொழில் வரப்பிரசாதம். சிவில் சமூகம் போலித்தனமில்லாமல் இந்த பிரச்சனையை அணுகக் கற்றுக் கொள்ளட்டும் என்கிறார் அவர். 

இந்த கட்டுரையின் ஆதாரமான தகவல்களும் புள்ளிவிபரங்களும் 2012 ஆம் ஆண்டிற்கானது.
நன்றி :இந்தியாடூடே
நன்றி: எழுத்தாளர் ஜெயராணி மயில்வாகணன்
தொடரரும்: தள்ளாடும் தமிழகம் 3


கருத்துகள் இல்லை: