வியாழன், 6 ஏப்ரல், 2017

ஆயுள் தண்டனை போதுமே!


இந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை. அதற்கு அடுத்த படியான தண்டனை ஆயுள்தண்டனை. இந்த ஆயுள் தண்டனை என்பது சிறைச் சாலையில்  14 ஆண்டுகள்  கழித்தால் விடுதலை கிடைக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் என்ன குற்றம் இழைத்தார்களோ தெரியவில்லை
கம்பி வலைகளுக்குள்ளே 14 ஆண்டுகள் கழித்தும் இன்றும் விடுதலை கிடைக்கவில்லை. கடந்த 31.3.2017 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 3500 நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கண்துடைப்பு மதுவிலக்கு அமுல் நடவடிக்கையாக  1000 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அக்கடைகளின் ஊழியர்களை மீதம் இருந்த டாஸ்மாக் கடைகளிலேயே பணி பார்க்கப் பணிக்கப்பட்டனர். தற்பொழுது அடைக்கப்படும் 3500 டாஸ்மாக் கடை ஊழியர்களின் நிலை  இன்று மிகுந்த பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளது
கடந்த 2003ல் மாவட்ட ஆட்சியர்கள் நேரடி கண்காணிப்பில் வேலைவாய்ப்பு துறை பரிந்துரையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் 36000 பேர் ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பணியாளர்கள் மதுவுக்கு மடிந்து மரணதண்டனை பெற்றுவிட்டனர். மேலும் பலர் வருமான போதாமல் வந்த வழியே திரும்பினர்.


தற்பொழுது டாஸ்மாக்கில் சுமார் 28000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மிக குறைந்த சம்பளத்தால் கூடுதல் விலை விற்பனை என்ற குற்றச் செயல் மூலமே இன்று குடும்பம் நடத்தி வருகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். எந்தவித தொழிலாளர் நலச்சட்டங்களும் நடைமுறை படுத்தப்படாமல் இருக்கும் நிர்வாகத்தின் தவற்றை 
டாஸ்மாக் ஊழியர்களால் தட்டி கேட்க முடியா சூழ்நிலையில் இருக்கின்றனர்

1000 கடைகளை அடைத்ததால் அரசிற்கு மிகுந்த வருமானம் இழப்பு ஏற்படும் என தமிழகஅரசு பட்ஜெட்டில் கூறியது. வருமானம் வழங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் வழியின்றி விழிபிதுங்கி ஒளியற்று நிற்கின்றார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை மாற்று அரசுப்பணியே.  தமிழக அரசு  டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து சிந்திக்குமா? படித்த படிப்பிற்கேற்ற வகையில் அரசுப்பணிகளில் காலியாக உள்ள இடங்களை டாஸ்மாக் ஊழியர்களை கொண்டு நிரப்பி இனியாவது இவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா அரசு?


14 ஆண்டுகள் பணியாற்றி இன்னும் பணிபாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஊழியர்களை அரசுப்பணியிடம் வழங்கிடாமல் அரசு சார்புடைய கழகங்களில் கொண்டு சேர்த்து கழட்டிவிடலாம் என எண்ணுவதாகவும் செய்திகள் வருகின்றன. அடைத்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் திறக்க இன்றும்  பணியாளர்கள் மீது சாட்டைகளை சுழற்றி பணி வாங்கிவருகின்றது டாஸ்மாக் நிர்வாகம். பண நெருக்கடி, பணி நெருக்கடி, மதுவால் பாதிப்பு என பலமுனை தாக்குதலில் ஆள்பட்டு கிடக்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். பலகோடி லாபம் வழங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் இன்று விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ள நிலையில் தற்கொலையும் தவறில்லை என சட்டமியற்றப்பட்டுள்ளதால்  தற்கொலை செய்து கொண்டு விடுவார்களோ என்று கவலை கொள்ள வேண்டியுள்ளது. கவனிக்குமா அரசு?
                                                .ஷாஜஹான்,எம்..,
                                  டாஸ்மாக் செய்திகள் வலைப்பதிவர்.
                                             தொலைபேசி :9942522470

                                                                                                         Emai: tasmacnews@gmail.com

1 கருத்து:

tasmac uliyar sangam citu madurai சொன்னது…

நன்றி ஊழியர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை