வெள்ளி, 13 மே, 2016

யூஸ் லெஸ் கைஸ்

(பயனற்ற படுபாவிகள்)

தேர்தல் நேரத்து  அரசியல்வாதிகள் மக்கள் நேசிப்பில் காதல் மன்னன் ஜெமினியையும் மிஞ்சுவார்கள். ஆம் காதலிக்கும் தருணங்களில் காதலியின் கண் அசைவில்  பூலோகத்தினையே புரட்டி போடுவதாக கூறுவர். ஆனால் ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் அமைதியாய் கணவனின் நிலைக்கு வந்துவிடுவர். மனைவியின் கோரிக்கைகளுக்கு மதிப்பு இருக்காது. இன்னும் தொழிலாளர்கள் போராட்டக் களத்திற்கு வந்துவிட்டால் அப்பப்பா இவர்கள் ருத்ர தாண்டவமே எடுப்பர். சமீபத்திய விளம்பரம் சொல்லும் பசி வந்தால் நீ ஹீரோயினியாக மாறிவிடுவாய் என்பது போல். 


தமிழகத்தில் மதுவிலக்கு போராட்ட கதையும் இப்படி தான். போராட்டங்கள் சசிபெருமாள் மரணம் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தும் போராட்டம் வரை அடக்குமுறை தான். தற்பொழுது யார் ஆட்சிக்கு வந்தாலும்  டாஸ்மாக் மூடுவிழா என்கின்றது தமிழக அரசியல்களம். அது சரி இதுவரை டாஸ்மாக்கால் யாருக்கு லாபம்? 

இனி இவர்கள் கொண்டு வரப்போகும் மதுவிலக்கால் யாருக்கு லாபம் கிடைக்கும். அலசினால் லாபங்கள் அனைத்தும் அரசியல் வாதிகளுக்கே. மதுவருமானத்தால் அரசிற்கு பெரும் லாபம் அனைவரும் அறிந்ததே. அதுபோல மதுபான ஆலைகள் மூலம் முதல்வர் முதல் மந்திரிகள் வரை லாபம் பார்க்கின்றனர். மது கொள்முதல் மற்றும் டாஸ்மாக் ஊழியர் பணிமாறுதல் செய்யும் விதத்தில் சேர்மனாக மந்திரியும் அதிகாரிகளும் பண வளத்தில் கொளுக்கின்றனர். மதுபான பார்கள் மூலம் மாவட்ட செயலாளர் முதல் பகுதிசெயலாளர் வரை லாபம் பார்க்கின்றனர்.


தற்பொழுதைய தேர்தல் அறிக்கையில் ஆறுவர் மக்கள் நலக்கூட்டணி மதுவிலக்கோடு  டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி என கூவியுள்ளனர். அரசுக்காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை நிரப்புவோம் என முதலில் கூறிய திமுக. தேர்தல் அறிக்கையில் அந்தர்பல்டி அடிக்கின்றது.   உழவர் சந்தை திறந்து மது விற்ற கரங்கள் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்கின்றது. பதவி மூப்பினை இழக்காமல் பணியாற்ற வழிவகை செய்வார்களாம். பதவி மூப்பா? பதிமூன்று ஆண்டுகளாக பணிநிரந்தரமில்லை. சொற்பச் சம்பளம். இதற்கெல்லாம் பதில்இல்லை. யார் கேட்டார்? இன்னும் வாரியப்பணி. லாபத்தில் செயல்பட்ட வாணிப கழகமே கண்டுகொள்ளாது கழட்டிவிடும் ஊழியர்களை  வறுமையில் வாடப்போகும் வாரியமா வாரி அணைக்கும். இனியும்  உங்களுக்கு இருண்ட காலம் தான் என இனிப்பு செய்தி சொல்கின்றது திமுக தேர்தல் அறிக்கை. மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் “அரசுதுறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்.”


நண்பர்களே பரிசீலனை செய்வார்களாம். என்ன தொழிலாளர்கள் மீது பற்று பாருங்கள்.  ஆட்சி செய்பவர்களும் செய்ய வில்லை. இனி ஆட்சி செய்ய நினைப்பவர்களும் செய்ய நினைக்க வில்லை. இதில் இருவரும் செய்வீர்களா கோஷம் வேறு. தொழிலாளர் நலச்சட்டத்தில் தொழிலாளர்கள் 90 நாட்கள் வேலை செய்தாலே சட்டப்படிப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இருப்பதை சமீபத்தில் மத்திய அரசு  240 நாட்களாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தது. எல்லா எதிர்கட்சியினரும் இதனை கண்டித்தனர். பத்தாண்டுகள் என்றால் சுமார் 3000 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்கள் குறித்து பரிசீலனை செய்வார்களாம். ஏன் இந்த நிலை? தேர்தல் காலம் மக்களுக்கு காதலியை போன்றவர்கள் தான் அரசியல்வாதிகள். ஆனாலும் தொழிலாளர்கள் விஷயத்தில் எப்பொழுதுமே எட்டிக்காய் தான். ஏனெனில் அரசியல்வாதிகள் அனைவரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள். இவர்கள் எப்படி தொழிலாளர்களுக்கு நியாயம் செய்வார்கள்.  தொழிலாளர் நலச்சட்டத்தினை கடைப் பிடித்து தனியாருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய அரசு தொழிலாளர்களின் குருதி குடித்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் எத்தனை நாட்களோ இந்த ஏமாற்று அரசியல்.

இன்னும் பலகட்சிகள் தற்பொழுது டாஸ்மாக் ஊழியர் நலன் பாதுகாக்கப்படும் என தேர்தல் உறுதிமொழி கொடுக்கின்றனர்.  எதிர்கட்சி தலைவியாக ஜெ. அம்மா இருக்கையில் “டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்றார். நம்பினார்கள் டாஸ்மாக் ஊழியர்கள் ஆட்சி மாற்றம் . காட்சிகள் ஏதும் மாறவில்லை.  டாஸ்மாக்கால்  அரசிற்கு லாபம், அரசியல்வாதிகளுக்கு லாபம், அதிகாரிகளுக்கு லாபம். 2003 ல் ரூ3000 கோடியாக இருந்த மதுவிற்பனை தற்பொழுது ரூ30000 கோடி இலக்கோடு நடைபோடுவது தமிழகம் அறிந்ததே.

சோதனை மேல் சோதனை


லாப கணக்கு பாத்தாச்சு. சரி டாஸ்மாக்கால் நஷ்டப்பட்டவர்கள் யார்? பொதுஜன உழைப்பாளிகளும், டாஸ்மாக் ஊழியர்களுமே நஷ்டப்பட்டுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்கள் அதிகாரிகளின் சோதனைகளால் மட்டுமல்ல உயிர் இழப்பால், நோயால், குடும்ப உறவு பாதிப்பால், போதிய வருமான மின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அரசியல்கட்சிகளும் தேர்தலுக்கு பின் இவர்களை ஏறெடுத்து பார்க்கப் போவதில்லை. 2003ல் 36000 பேராக இருந்த டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 5000 பேரை காவு கொடுத்து இன்று 28000 பணியாளர்களே உள்ளனர். இவர்களிலும் பலர் மதுவால் பாதிக்கப்பட்டு நடைபிணங்களாக வலம் வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களின் நிலைப் பற்றி புதிதாக பொறுப்பேற்க விருக்கும் அரசு வெள்ளை அறிக்கை வழங்குமா? கோடீஸ்வர கோமான்கள் ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் கோப்பை ஏந்தியே மடிவது தான் முடிவாகி விட்டது. ரூ30000 கோடி விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 300ம் சொச்ச நிரந்தரப்பணியாளர்களே உள்ளனர். இங்கே லாபம் கொடுத்தவர்கள் லாயக்கற்று இருக்கின்றார்கள். இன்று மதுவிலக்கு கோஷத்தில் மதுவிற்றவர்கள் கரைக்கப்படும் நிலை. இனியாவது  இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை கொண்டு நல்லது நடக்குமா? என ஏங்கும் யூஸ் லெஸ் கைஸ். பயனற்ற படுபாவிகளான டாஸ்மாக் பணியாளர்கள்.
                                                                                                 tasmacnews@gmail.com                                                         
1 கருத்து:

super deal சொன்னது…

அனைவருக்கும் வணக்கம்

புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon