வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

போராட்ட களம்.


கடந்த ஐந்து ஆண்டு கால மன்மோகன் ஆட்சிக்கும் நடைபெறும் 75 நாள் மோடியின் ஆட்சிக்கும் எந்தவித மாற்றமில்லாமல் இருப்பதாக ஊடகங்கள் சொல்லிவரும் நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால  கலைஞர் ஆட்சியும் தொடர்ந்து அம்மாவின் மூன்று ஆண்டுகால ஆட்சியும் தொழிலாளர்கள் நிலையில் எந்தவித முன்னேற்ற மாற்றத்தினையும் காண முடியவில்லை. தொழிலாளர்கள் நாளுக்கு நாள் விலைவாசி உயர்விலும் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியின் பிடியில்  ஆலையில் சிக்கிய கரும்பாக பிழியப்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலை மற்ற தொழிலாளர்களை விட அம்மாவின் மீதும் அவர்களின் ஆட்சியின் மீது  மிகுந்த நம்பிக்கை வைத்த டாஸ்மாக் தொழிலாளர்களை மிகவும் பாதித்துள்ளது. ஏனெனில் சென்ற ஆட்சியில் கலைஞர் அவர்கள் அம்மாவினால் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தியது நாடு அறிந்ததே. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது டாஸ்மாக்கினை இழுத்து பூட்டிவிடுவதாக மிரட்டி பணியவைத்தார். அப்போது பிரபல எழுத்தாளர் (தி ஹிந்து தமிழ்) சமஸ் அவர்கள் தினமணியில் யாரங்கே? என்ற தலைப்பில் அரசரை போன்று ஆட்சியாளர்கள் நடப்பதாக கட்டுரை வடித்தார். அம்மாவும் “டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை” என பேட்டியளித்தார். ஆனால் ஆட்சியின் கடந்த மூன்று வருடங்களிலும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை அப்படியே நிறைவேற்றப்படாமல் உள்ளது.


சட்டமன்றத்தில் இது குறித்து எதிர்கட்சி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ திரு.சவுந்தரராசன் அவர்களும் எழுப்பிய கேள்விக்கு  துறைமந்திரி அவர்களின் பதிலை பாருங்கள் தொழிலாளர் நலனில் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என தெரியவரும்.

திரு.அ.சவுந்தரராஜன்: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சகூலிச்சட்டம் பொருந்தாது என்றால் அரசே உருவாக்கிய தொழிலாளர் சட்டங்களை அரசே மீறுவதால் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகின்றதா என்று சந்தேகம் வருகிறது!

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: டாஸ்மாக் ஊழியர்கள்  தொகுப்பூதியம் தான் பெறுகிறார்கள்.அவர்களுக்கு மருத்துவவசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.அவர்களின் உரிமைக்களுக்காக போராடும் தொழிற்சங்கங்கள் அவர்கள் முறைகேட்டில் ஈடுபடும் போது பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.எனவே அவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் பணிபுரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்.

திரு.அ.சவுந்தரராஜன்:  எல்லா உரிமைகளையும் வழங்கிவிட்டு அவர்கள் தவறு செய்யும் போது அதை களைய  நடவடிக்கை எடுங்கள் என்றால் அதற்கு நாங்கள் ஒத்துழைக்கத் தயார்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: சட்டசலுகைகள் இல்லை என்பதால் முறைகேட்டில் ஈடுபடுவது சரியல்ல.தொழிலாளர்களின் நலனுக்கான தொழிற்சங்கம் நடத்துபவர்களில் சிலர் தங்களின் சுயநலனுக்காக தொழிலாளர்களை முறைகேடுகளில் ஈடுபடுத்துகிறார்கள்.எனவே அப்படி தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கைஎடுக்கும் போது அதை உறுப்பினர் சார்ந்த தொழிற்சங்கங்கள் அரசுக்கு முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றுள்ளது.

இதில் சட்டப்படி தொழிலாளர் சலுகைகளை வழங்க கேட்டால் தொழிற்சங்கத்தினரை குற்றம்சாட்டுகின்றார். உண்மையில் தமிழகம் முழுவதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்களில் அதிகம் பேர் அவர்சார்ந்த அண்ணா தொழிற்சங்கத்தினரே. இப்படி ஆட்சிக்கு வரும் முன்பு தொழிலாளர் கோரிக்கை நிறைவேற்றுவதாக கூறி ஆட்சியில் அரசர்களை போன்று செயல்படும் ஆளும்கட்சியினர் உடன் டாஸ்மாக் ஊழியர்களின் நியாமான கோரிக்கைகளை வரும் மானிய கோரிக்கையின் பொழுது நிறைவேற்றவேண்டி பல்வேறு சங்கங்களும் தற்பொழுது போராட்டகளத்தில் குதித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 18-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) ஈடுபட்டது.
எ.ஐ,டி.யூ.சி 7.8.2014 அன்று மாநில தழுவிய ஆர்ப்பாட்டத்தினை மாவட்ட தலைநகரங்களில் நடத்தியது.

தமிழகத்தினை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடர் மழைபொழியும் பொழுது தமிழகத்தில் மழைபொய்ப்பிப்பதும் வறட்சியின் உச்சத்திற்கு சென்றுவருவதும்   டாஸ்மாக் ஊழியர்கள் போன்ற  தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படாததும் ஒருசில அரசியல்குண்டர்கள் மட்டும் கொள்ளையில் வளம் பெருவதுமான நிலைதனை எண்ணி தொழிலாளர்கள் வடிக்கும் கண்ணீரும்,மன வலியின் பாதிப்பின் சாபமும் காரணமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறி நாடு சுபிட்சம் பெறும் நாளை காண உங்களுடன் காத்திருக்கும்

                                      உங்கள் ஷாஜஹான்,
                                      டாஸ்மாக் செய்திகள்                              

கருத்துகள் இல்லை: